02 நவம்பர் 2018

தம்பிக்காகத் துடித்தவர்





தூத்துக்குடி, திருநெல்வேலி, பாளையங் கோட்டை பகுதிகளிலே,
உணவுக் கடை வைத்திருக்கிற உத்தமர்களுக்கு,
     எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பசியால் வாடுகிறானாமே, அங்கும், இங்கும் சற்றித் திரிகிறானாமே, அவனை வழியிலே பார்த்தால், விடுதியில் உட்கார வைத்து, தயவுசெய்து, அவனுக்கு உணவளியுங்கள். உங்களது கணக்கு சரி செய்யப்படும்.


     தன்னைச் சந்திக்கவரும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் பாளையங் கோட்டையைச் சேர்ந்தவர்களிடம், மறவாமல், துண்டுச் சீட்டில், எழுதி, எழுதி, இவ்வூர்களில் இருக்கும் உணவு விடுதி உரிமையாளர்களிடம் கொடுக்கச் சொல்லி, கொடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கிறார் இவர்.

     என் தம்பிக்கு உணவளியுங்கள்.

     காப்பாற்றுங்கள்

     கணக்கு எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

     நான் பணம் கொடுத்துக் கடனை நேர் செய்கிறேன்.

     படிக்கும்போதே மனதை, வேதனை கவ்வுகிறது அல்லவா,

     இச்செய்தியினை மட்டுமல்ல, வேறொரு செய்தியினையும் துண்டுச் சீட்டுகளில் எழுதி, கொடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கிறார் இவர்.

அழுக்குப் படிந்த கந்தல் உடையோடும், அழுக்குத் துணியோடும், அந்தப் பகுதிகளில், பைத்தியம் பிடித்த நிலையில் திரியும், என் தம்பியை, யாரேனும் பார்த்தால், தயவு செய்து அவனை, துணிக் கடைக்கு அழைத்துச் சென்று, நல்ல துணிகளைக் கொடுத்து அனுப்புங்கள். உங்களது கணக்கு சரி செய்யப்படும்.

     இவ்விரு செய்திகளுமே, நம் மனதைக் கிழித்து ரணமாக்கி, வேதனையால் வாட்டுகிறன அல்லவா.

     நமக்கே இப்படியென்றால், அந்த அண்ணனுக்கு எப்படி இருக்கும்.

     அந்த அண்ணன், துண்டுச் சீட்டுக்களை, எழுதி எழுதிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

     தன்னால் வெளியில் செல்ல இயலாது.

     விடமாட்டார்களே

     சிறையில் அல்லவா வாடிக் கொண்டிருக்கிறார்.

     சித்திரவதையை அல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

     மிகப்பெரும் செல்வந்தர்.

     வந்தவர்களுக்கு எல்லாம் வாரி வாரிக் கொடுத்த வள்ளல்.

     குடும்பம் மறந்து, நாடே பெரிதென்று எண்ணி உழைத்த உத்தமர்.

     நாட்டிற்காகத் தன் சொத்து முழுவதையும் இழந்தவர்.

     இன்றோ, இவர்தம் தம்பியைக் காக்க ஆளில்லை.

     அண்ணல் சிறையில்

      தம்பி தெருவில்.

---

     நீதிபதி பில்ஹேம், தன் அண்ணனுக்கு வழங்கிய தண்டனையை, நீதிமன்றத்தின், ஒரு மூலையில் நின்று கேட்ட மறு நிமிடமே, உடலும், உள்ளமும் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியதைப் போன்ற ஓர் உணர்வு.

நாற்பதாண்டு கால சிறைவாசத்தைத் தண்டனையாக வழங்குகின்றேன்.

     ஐயோ, என் அண்ணனுக்கு நாற்பதாண்டுகால சிறை தண்டனையா?

     செவியில் இடியாய் நுழைந்த வார்த்தைகளால், அந்த நொடியே, தம்பியின் மனது பேதலித்துத்தான் போனது.

     பைத்தியம் ஆனார்

     முழுப் பைத்தியம் ஆனார்.

---

தன் தம்பி மீனாட்சி சுந்தரத்திற்காகத் துடியாய் துடித்த,
இந்த அண்ணன் யார் தெரியுமா?

நமக்காக,
நம் நாட்டு விடுதலைக்காக
உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தியாகச் செம்மல்.


கப்பலோட்டியத் தமிழன்

செக்கிழுத்தச் செம்மல்

வ.உ.சிதம்பரனார்.