24 நவம்பர் 2018

பதுங்கு குழியில் முளைத்த எழுத்து
     பதுங்கு குழி

     சீறிப் பாய்ந்து வரும் குண்டுகளிடமிருந்து, தன்னைக் காத்துக் கொள்வதற்காக, மனிதன் கண்டுபிடித்த எளிமையான, வலிமையான தற்காப்பு ஆயுதம், பதுங்கு குழி.

     தற்காத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சமவெளிகளில், மறைந்திருந்து தாக்குவதற்கும், பதுங்கு குழிகள் பயன்படுத்தப் பட்டன.

     பதுங்கு குழியினை முதன் முதலில் உருவாக்கிப் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா?

     ஜெர்மானியர்கள்

     ஜெர்மனியைத் தொடர்ந்து நேச நாடுகளும், பதுங்கு குழிகளை அமைக்கத் தொடங்கின.

     ரங்கூன்

    இன்றைய யங்கோன்

    அன்றைய பர்மா

    இன்றைய மியான்மர்

    ரங்கூனைச் சுற்றிலும் பதுங்கு குழிகள்

    ரங்கூன் மக்கள் தங்களுக்குத் தேவையானப் பதுங்கு குழிகளைத் தாங்களே வெட்டிக் கொண்டனர்.

     பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர், என நம் தமிழகத்து மக்கள், ரங்கூனைத் தேடி ஓடிய காலம்.

     1941

     இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம்

     ரங்கூனில் குண்டு போடுவதற்காக, ஜப்பான் விமானங்கள், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த காலம்.

     அபாயச் சங்கின் ஒலி எழுந்தாலே, ஊர் மக்கள் எல்லாம், ஓட்டமாய் ஓடி, பதுங்கு குழிகளைத் தஞ்சமடைந்த காலம்.

     இதோ அபாயச் சங்கின் ஒலி

     ஊர் மக்கள் எல்லாம், தங்களின் பணிகளை, அப்படியே விட்டுவிட்டு ஓடுகிறார்கள்.

     இதோ இம்மனிதரும் ஓடிக் கொண்டிருக்கிறார்.

     குள்ளமான உருவம்,

     வழுக்கைத் தலை

     சிவந்த மேனி

     கதர் வேட்டி, கதர் ஜிப்பா

     கை நிறையக் காகிதங்களையும், எழுதுகோலையும் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்.

     இதோ இவர் தனக்காக உருவாக்கிய பதுங்கு குழி

     உள்ளே ஒரு நாற்காலி

     அருகிலேயே மடியில் வைத்துக் கொள்வதற்காக ஓர் அட்டை

     வெகுவேகமாய் ஓடி வந்த மக்கள் அனைவரும், பதுங்கு குழிகளில் குதித்து, வானம் நோக்கி, விமானம் வந்து விடுமோ, குண்டுகளைப் போட்டுவிடுமோ, என்ற அச்சத்தில் உறைந்து அமர்ந்திருக்கின்றனர்.

     இவர்மட்டும், நாற்காலியில் அமர்ந்து, தலை குனிந்து, எழுதத் தொடங்குகிறார்.

     ஆம், எழுதத் தொடங்குகிறார்.

     அதற்காகத்தான் கை நிறைய காகிதங்களை எடுத்து வந்திருக்கிறார்.

     விமானத்தின் ஒலி, இவர் காதுகளில் என்றுமே விழுந்ததில்லை.

    அருகாமையில் எங்கேனும் குண்டு விழுந்ததா என்பது கூட இவருக்குத் தெரியாது

     உலகையே மறந்து, இவரது கவனம் எல்லாம், எழுதுவதிலேயே குவிந்திருக்கிறது.

     இவர் எழுதிக் கொண்டே இருக்கிறார்.

     வீட்டில், அபாயச் சங்கு முழங்கினால் பதுங்கு குழியில், என இவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்.

     கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டாவின் நினைவலைகளில் மூழ்கி, முத்தெடுத்து எழுதிக் கொண்டே இருக்கிறார்.   

     சாக்ரடீஸின் புத்தகங்கள், பிளேட்டோவின் புத்தகங்கள், பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டிலின் புத்தகங்கள் என ஒட்டுமொத்த கிரேக்க வரலாற்றையும் படித்துப் படித்துக் கரைத்துக் கரைத்துக் குடித்தவர் இவர்.

      பதுங்கு குழியில் அமர்ந்து, பிளேட்டோவின் ரிபப்ளிக் என்னும் நூலினை, தமிழில் மொழி பெயர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

      குண்டு விழுந்து உயிர் போனாலும் பரவாயில்லை, ஆனால் அதற்குள் எழுதி முடித்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எழுதிக் கொண்டிருக்கிறார்.

     பிளேட்டோவின் ரிபப்ளிக்

     குடியரசு எனத் தனது மொழி பெயர்ப்பிற்குப் பெயர் வைக்க விருப்பமில்லை இவருக்கு.

     குடியரசு என்பது அரசு வகைகளில் ஒரு வகைதானே தவிர, பிளேட்டோ அதைப் பற்றி மட்டுமே அந்தப் புத்தகதில் எழுதவில்லை, முழுமையான அத்தனை அரசு அமைப்புகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

     பிளேட்டோவின் அரசியல்

     ஆம், பிளேட்டோவின் அரசியல் என்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து, எழுதிக் கொண்டிருக்கிறார்.

     பதுங்கு குழியில் இருக்கிறோம் என்பதனையே மறந்து, பிளேட்டோவுடன் வாழ்ந்து, பழகிப் பழகி எழுதிக் கொண்டே இருக்கிறார்.

     இதனை அவரே, தன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

திடீரென்று அபாயச் சங்கு ஊதுவார்கள். உடனே ஒரு கத்தை வெள்ளைக் காகிதத்தையும், மை நிரப்பிய பேனாவையும் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் நாற்காலியோடு இருக்கும் பதுங்கு குழிக்குள்ளே உட்கார்ந்து பிளேட்டோவைப் பற்றி மாதக்கணக்காக எழுதிக்கொண்டே இருந்தேன்.

எல்லோரும் பதட்டத்தோடு இருப்பார்கள்.

சிலபேர் இதயமே நின்றுவிடுமோ என்று எதிர்பார்க்கிற அளவுக்கு பயம் பீதியாக இருந்த நேரம். ஏனென்றால் எந்த நேரத்தில் குண்டு போடுவார்கள் என்று தெரியாது.

ஆனால் அந்த நேரத்திலெல்லாம், நான் பிளேட்டோவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். பிளேட்டோ என்னைக் கைவிடவில்லை. பிளேட்டோவும் நானும் நண்பர்களாக இருந்ததுபோல், அவனோடு அந்தக் குழிக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததுபோல ஓர் உணர்வு எனக்கு.

     பிளேட்டோவின் அரசியல்

     பதுங்கு குழியில் அமர்ந்து எழுதப் பெற்ற, உலகின் ஒரே நூல் இதுவாகத்தான் இருக்கும்.

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

     1930 லேயே, உலகத்தின் தலைசிறந்த ஆங்கில நூல்களை எல்லாம், பெருந்தொகையினைச் செலவு செய்து, வரவழைத்துப் படித்தவர்.

     படித்துப் படித்துத் திளைத்தவர். 

     உலகு முழுதும் நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை எல்லாம், படித்துத் தெளிந்து, தமிழ்ப் படுத்தியவர்.

     78 நூல்களின் ஆசிரியர்

மாஜினி, சாக்ரடீஸ், சான்யாட் சென், என
உலகு தழுவியப் பார்வையோடு,
உலக ஆளுமைகளையெல்லாம்,
தமிழ் எழுத்துக்களில் ஏற்றி,
தமிழகத்தில் இறக்கி வைத்தவர்.


இவர்தான்
வெ.சாமிநாத சர்மா.

    

21 கருத்துகள்:

 1. பதுங்கு குழியில் எழுதிய முதல் நூல்...! வியக்க வைக்கும் அறியாத தகவல் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. வியப்பான தகவல் நண்பரே வாழ்க அவர்தம் புகழ்!

  பதிலளிநீக்கு
 3. வியக்க வைக்கும் தகவல்.

  புதியதொரு தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 4. பதுங்குகுழியிலிருந்து முதல் நூல். உங்கள் பாணியில் வியக்க வைத்துவிட்டீர்கள். புதிய, அறிந்திராத தகவலை விவரமாக அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 5. பதுங்கு குழியில் ஒரு வைரம்,,,/

  பதிலளிநீக்கு
 6. பதுங்கு குழிகளில் எழுத்து மட்டுமின்றி
  வாழ்க்கையும் முளைத்துள்ளது பலருக்கு.

  பதிலளிநீக்கு
 7. பதுங்கு குழியில் இருக்கும் போதும் எழுதி முடிக்க வேண்டும் என்று ஆர்வம் வியக்க வைக்கிறது.

  வெ.சாமிநாத சர்மா அவர்களைப்பற்றி புதிகாக அறிந்து கொண்டேன், நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அரைகுறையாய் அறிந்திருந்த விஷயம், உங்கள் மூலம் விபரமாகத் தெரிந்தது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா24 நவம்பர், 2018

  1942 என்னும் மங்கலான நினைவு சென்னையில் இருந்தோம் ஏ ஆர் பி படையினர் சங்கு ஊதுவார்கள் பதுங்கு குழி தேடி ஓடிய மங்கலான நினைவு நிச்சயமாக சொல்ல முடியவில்லைஅப்போதெல்லாம் சென்னையில் பதுங்கு குழிகள் இருந்தனவா என்பதை என்னிலும் மூத்தவர்கள் கூறலாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்பெயரில்தான் பின்னூட்டமெழுதி இருந்தேன்

   நீக்கு
 10. பதுங்கு குழியில் நாற்காலி அமைத்து.. அதற்கே எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டும்? எவ்வளவு முன்னேற்பாடு... எவ்வளவு ஆர்வம் எழுத்தின் மீது... வியப்பான, புதிய தகவல்.

  பதிலளிநீக்கு
 11. வித்தியாசமான தகவல்! எழுத்தின் மீதான நேசிப்பின் எல்லை பிரமிக்க வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. இவருடைய புத்தகத்தை படித்தாக ஒரு நினைவு..என்ன புத்தகம் என்று தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
 14. அருமையான தகவல்.. இலங்கையில் பதுங்கு குழிக்குள் இருந்தே லாம்பு வெளிச்சத்தில் படித்து ஸ்கொலசிப்பில் முதலிடம் பெற்ற மாணவரின் கதைகளும் உண்டு...:(.

  பதிலளிநீக்கு
 15. அருமையான தகவல். நன்றி

  பதிலளிநீக்கு
 16. பதுங்கு குழியில் எழுதிய நூல்...! வியக்க வைக்கும் அறியாத தகவல் .. நன்றி..bro....

  பதிலளிநீக்கு
 17. பதுங்கு குழி வாழ்வையும் பயனுள்ளதாகப் பயன் படுத்திக்கொண்ட பயமற்ற மாமனிதர்ஃ

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு