17 நவம்பர் 2018

பேயும் நோயும்
     அது ஒரு காலம்.

     ஒரு பெண் கருத்தரிக்கிறார்.

     குடும்பமே மகிழ்கிறது

     அன்றிலிருந்து உணவு முறை மாறுகிறது


     காலையும், மாலையும், ஐந்து பூண்டு பல்லை அரைத்து நசுக்கி, நாட்டுப் பசு மாட்டுப் பாலில் கலந்து குடிக்கக் கொடுக்கிறார்கள்.

     பெருங்காயம் சேர்த்த ரசம்

     முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் இந்த உணவு முறை.

     பின்னர், குழந்தை பிறக்கும் வரை, ஒவ்வொரு நாளும், ஒரு நாட்டு மாதுளை.

     கருவில் நன்கு வளர்ந்த குழந்தை புரண்டு, திரும்பி, வெளிவரத் துடிக்கும் பொழுது, பிரசவ வலி தொடங்கும்போது, திருநீற்றுப் பச்சிலையை சாறு பிழிந்து, அடி வயிற்றில் தடவுகிறார்கள்.

     வலி வெகுவேகமாய் குறைகிறது

     உடன் சுகப் பிரசவம்.

     இன்றோ, இதையெல்லாம் மறந்தே போய்விட்டோம்.

     குழந்தை பிறந்தவுடன், தாயின் அசதி போக்க, உடலுக்கு வலிமை கூட்ட, திருநீற்றுப் பச்சிலையின் விதையினை, ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குடிக்கக் கொடுக்கிறர்கள்.

     உடலின் அசதி அலுப்பு பறந்து போகிறது

     இன்றோ இதையெல்லாம் மறந்தே போய்விட்டோம்.

     குழந்தை பிறந்த பின், தாயையும் சேயையும், வீட்டின் ஒரு பகுதியில், தனித்துத்தான் வைத்திருந்தார்கள்.

     இப்பகுதியின் பெயர் முத்து அறை

     மறந்தே போய்விட்டோம்.

     எதற்காகத் தாயையும், சேயையும் தனித்து வைக்க வேண்டும்.

     பிரசவத்தின் காரணமாக, தாயின் உள்ளும், புறமும் ரணம் ஏற்பட்டிருக்கும். இக்காயங்களை ஆற்றியாக வேண்டும்.

     எனவே தாய்க்குத் தனி உணவு

     பிரண்டை, மிளகு, பூண்டு, உப்பு மற்றும் சங்கு இலை சேர்ந்த, தனி உணவைச் சமைத்து வழங்கினார்கள்.

     புண் வெகுவேகமாய் ஆறிற்று.

     மறந்தே போய்விட்டோம்.

     இந்த உணவுகளோடு சேர்த்து மருந்துகளையும் கொடுத்தார்கள். 

     காய கருப்பட்டி

     சட்டி காயம்

     இவைதான் மருந்துகள்

     சுக்கு, பூண்டு, கருப்பட்டி மூன்றையும் அரைத்துக் குழைத்து சிறு சிறு உருண்டையாய் உருட்டினால் காய கருப்பட்டி.

     சுக்கு, பூண்டு, கருப்பட்டியோடு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பேறுகால மருந்தையும் சேர்த்துக் கலந்து, மண் சட்டியில் காய்ச்சி, லேகியம் போல் தயாரிப்பதுதான் சட்டி காயம்.

      இம்மருந்துகளால் தாயின் உடல் வலிவு பெற்றது

     குழந்தைக்காக விரிந்த உடல் உறுப்புகள், மீண்டும் சுருங்கி தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது

      மறந்தே போய்விட்டோம்

     தாய்க்கு மட்டும்தானா மருந்து

      சேய்க்கு இல்லையா என்னும் கேள்வி எழுகிறதல்லவா

      உண்டு

     சேய்க்கும் மருந்து உண்டு.

     உர மருந்து

     அக்கால வீடுகளில் அம்மிக்கல், உரை கல் என இரண்டு இருக்கும் 

     அம்மிக்கல் அன்றாட உணவிற்குத் தேவையான மசாலா பொருட்களை அரைப்பதற்கு .

     அம்மிக் கல்லின் பயன் பற்றிய ஒரு வியப்பான செய்தி தெரியுமா?

      அம்மிக் கல்லை நாள்தோறும் பயன்படுத்துவோரை, மார்பகப் புற்று நோய் நெருங்கவே நெருங்காது.

       இன்றைய பெண்களில் நிறைய பேருக்கு அம்மிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.

      உரை கல்

      சிறிய வடிவிலான கல்

      மருந்துகளை இக்கல்லில் தேய்த்து எடுப்பார்கள்

       அம்மிக்கு அரைக்கனும், மருந்துக்கு உரைக்கனும் என்ற ஒரு பழமொழியே நம் மொழியில உண்டு.

     உர மருந்து

      ஜாதிக்காயை உரை கல்லில் ஒரு உரசு உரசுவார்கள், அதாவது ஒரே ஒரு முறை தேய்ப்பார்கள்.

     மாசிக்காய் ஒரு உரசு

     கடுக்காய் ஒரு உரசு

     சுட்ட வசம்பு ஒரு உரசு

     பெருங்காயம் ஒரு உரசு

     மழைக்காலம் எனில், இவற்றோடு

     சுக்கு ஒரு உரசு

     சித்தரத்தை ஒரு உரசு

     இந்து உப்பு ஒரு உரசு

     இத்துணையையும் ஒன்றின் மேல் ஒன்றாக, உரை கல்லில் உரசி, விரலால் அழுந்தத் தடவி வழித்து எடுத்து, தண்ணீர் கலந்து குழந்தைக்குக் கொடுத்தார்கள்.    

     உர மருந்து

     குழந்தை நலமோடு, உடல் வலிவோடு, உள்ளத் தெளிவோடு வளர்ந்தது.

     மறந்தே போய்விட்டோம்.

     நண்பர்களே, நம் நினைவுகளை, நம்மைக் கடந்து, நம் பெற்றோரையும் கடந்து, சற்றுப் பின்னோக்கிச் செலுத்திப் பார்ப்போமா.

     நமது தாத்தா, பாட்டி எல்லாம் மகிழ்ச்சியாகத்தானே வாழ்ந்தார்கள்.

     தங்கள் வீட்டில், பழைய வீட்டு மனை அல்லது நிலப் பத்திரங்கள் இருந்தால் எடுத்து ஒரு முறை படித்துப் பாருங்கள். 

     நம் தாத்தா கலத்துப் பத்திரம்

     பத்திரங்களில் நம் தாத்தாக்கள் தங்களின் பெயரினை எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

     தங்கள் தாத்தாவின் பெயருக்குமுன், சுகவாசி என்னும் அடைமொழியும், தங்களின் பாட்டியின் பெயருக்குமுன் சுக ஜீவனம் என்னும் அடைமொழியும் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

      சுக வாசி

      சுக ஜீவனம்

      அதுவல்லவா வாழ்க்கை

     நம் முன்னோர், உழவனும் உழத்தியுமாக வாழ்ந்த காலத்தில், மகிழ்ச்சியாகத்தானே வாழ்ந்தார்கள்.

     இன்று நாம் வளமாக இருக்கிறோம்

     நலமாக இருக்கிறோமா?

     மகிழ்வாக இருக்கிறோமா?

     எதற்கெடுத்தாலும் மருத்துவமனை, மருத்துவமனை என்று ஓடிக் கொண்டல்லவா இருக்கிறோம்.

     கை நிறைய, இரசாயண மாத்திரைகளை அள்ளி அள்ளி, உணவு போல் முழுங்கிக் கொண்டல்லவா இருக்கிறோம்.

     ஏன் இந்த நிலை?

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகிறான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே

என முழங்கும் திருமந்திர வரிகளை மட்டுமல்ல, நம்மையுமே நாம் மறந்து விட்டோம்.

     நம் மரபுகளை மறந்து விட்டோம்

     நம் மண்ணை மறந்து விட்டோம்

     நம் மண்ணின் மாண்பை மறந்து விட்டோம்.

     நம் மண்ணின் உணவை மறந்து விட்டோம்.

     உணவு என்பது உடலுக்கு எரி பொருள் மட்டுமல்ல.

     உணவு என்பது உண்பவனை மகிழ்ச்சியுடன் இருக்க வைப்பதுடன், சமூகம் சார்ந்ததாக, பண்பாடு சார்ந்ததாக, சுற்றுச் சூழல் சார்ந்ததாக, தெய்வம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

     பிள்ளையார் கோயிலில் சுண்டல் தருவார்கள்.

      பெருமாள் கோயிலில் புளி சாதம் தருவார்கள்

      ஒவ்வொரு தெய்வத்திற்கும்கூட தனித் தனி உணவு.

       ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு உணவைப் படைத்த, நம் முன்னோர், பேயைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை கூறியிருக்கிறார்கள்.

      பேயும் நோயும் கற்பனை.

      பேய் கற்பனை

       நோய் கற்பனை

       நோய் என்று எதுவும் இல்லை, அது ஒரு குறைபாடு.

       இக்குறைபாட்டினைப் போக்கும் மருந்து உணவு.

      உணவே மருந்து

      மருந்தே உணவு

      இன்றைய நோய்களுக்கு முக்கிய காரணம் அரிசு

      ஆனாலும் அரிசிதான் நோய் தீர்க்கும் மருந்து

      அரிசி, தீட்டாத அரிசிதான் மருந்து.

       அரிசியில் கூட, பளபளப்பைத் தேடித் தேடி, மருத்துவமனைகளுக்கு அல்லவா ஓடிக் கொண்டிருக்கிறோம்.

      நம் நாட்டில் எத்துணை வகையான அரிசி வகைகள் இருக்கின்றன தெரியுமா?

     சொன்னால் நம்ப மாட்டீர்கள்

நடுவண் அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும்
National Beauro of Plant Genetic Research
அமைப்பின் பதிவேடுகளின் படி
நம் நாட்டில், ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம், ஈராயிரம் அல்ல
முழுதாய்
ஒரு இலட்சம்
அரிசி ரகங்கள் இருக்கின்றன.

      வியப்பாக இருக்கிறதல்லவா

      ஒரு இலட்சம் அரிசி வகைகள்

      உண்மை

     மறந்தே போய்விட்டோம்.

     ஒரு சட்டை வாங்குவதற்கு நாம் செலவிடும் நேரத்தை, ஒரு காலணி வாங்குவதற்கு நாம் செலவிடும் தொகையை, நாம் உண்ணும் அரிசியைத் தேர்ந்தெடுப்பதற்காகச் செலவிடுவதே இல்லை.

      வேதனை அல்லவா

      இவ்வுலகில், வெள்ளை பொன்னி, சிவப்பு பொன்னி என்று இரண்டே இரண்டு அரிசி வகைகள்தான் உள்ளன.

     ஆந்திரா பொன்னி, கர்நாடகா பொன்னி, குண்டு பொன்னி, அந்த பொன்னி, இந்தப் பொன்னி என, ஆயிரம் பொன்னி அரிசி வகைகள் இன்று அமோகமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

     ஆனால் இவை எதுவுமே உண்மையில் பொன்னியே அல்ல.

     பொன்னி என்பது இன்று வணிகப் பெயராக, சந்தைப் படுத்துதலின் உத்தியாக, தாரக மந்திரமாக மாறித்தான் போய்விட்டது.

       நம்மிடத்தில் என்ன இல்லை?

        எல்லாம் இருக்கிறது

      நாம்தான் தெரிந்து கொள்வதில்லை

       அறிந்து கொள்வதில்லை

       பின்பற்றுவதும் இல்லை

       பிறப்பு முதல் இறப்பு வரை நெல்லுடன் வாழ்ந்த சமூகம், நம் சமூகம்.

       ஆனால் நாம் அந்த மரபு குணத்தை இழந்து விட்டோம், மறந்து விட்டோம்.

      சரியான, முழுமையான, முறையான உணவு இல்லையேல், எந்த மருந்தும் வேலை செய்யாது.

      சரியான, முழுமையான, முறையான உணவு இருந்தால், எந்த மருந்தும் தேவைப்படாது.

       மறந்தே போய்விட்டோம்.

       ஆண் குழந்தைப் பிறக்க வேண்டுமா, திருமந்திரம் வழி காட்டுகிறது.

       பெண் குழந்தைப் பிறக்க வேண்டுமா, திருமந்திரம் சுட்டிக் காட்டுகிறது

       கூனாய், குருடாய், செவிடாய், முடமாய் பிறப்பதற்கானக் காரணங்களை, புட்டுப் புட்டு வைக்கிறது நம் திருமந்திரம்.

      மறந்தே போய்விட்டோம்.
----

      நண்பர்களே, நாம் இன்னும், நம் மரபுகளை முற்றாக மறந்துவிடவில்லை, இழந்துவிடவில்லை, முழுமையாய் அழித்துவிடவில்லை, இப்பொழுதேனும் விழித்தெழுங்கள், திரண்டு வாருங்கள், இழந்த, மறந்த நம் மரபுகளை மீட்டெடுப்போம் வாருங்கள், வாருங்கள் என


வேளாண்மைச் செம்மர், இயற்கை மருத்துவர்
திரு கோ.சித்தர் அவர்கள்
பெருங்குரலெடுத்து அழைத்தபோது,
கும்பகர்ணத் தூக்கம் கலைந்த உணர்வோடு,
உடல் சிலிர்த்துத்தான் போனது.

மக்கள் மறந்த மரபுகள்
(வேளாண்மை, உணவு, மருத்துவம்)
என்னும் தலைப்பில்,
ஏடகம்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில்
கடந்த 11.11.2018 ஞாயிறன்று மாலை, பதினென் சித்தர்களின் அடியொற்றி வாழ்ந்துவரும்
திரு கோ.சித்தர் அவர்களின்
பொழிவினைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்கின்றேன்.

எல்லோர்க்கும் அது ஏடகம்
என்றாலும் அதுதான் பீடகம்
இலக்கியத்தின் நல் தேடகம்
இனிமை தரும் ஓர் ஆடகம்
இங்கில்லை எதிலும் பூடகம்
இருள் மனதை நன்றே மூடகம்
உரை கேட்டால் வாரா பீடகம்
உரை வீச்சில் நல்ல மேடகம்
ஆன்மிகத்தமிழ் திகழ் பாடகம்
ஆர்வலர் பலர் வந்து கூடகம்
இல்லையிதற்கொரு ஈடகம்
நல்லோர் பலரிதை நாடகம்
வருவோர்க்கில்லை வாடகம்
நாளும் நாளுமதன் புகழ் நீடகம்
என ஏடகம் அமைப்பின் அருமையை, பெருமையை, தன் கவி வரிகளால், உயர்த்திப் பிடிக்கும்,


உலகு சுற்றிவரும் உன்னதக் கவிஞர்
பாவலர் தஞ்சை தர்மராசன் அவர்கள்
இந்நிகழ்விற்குத் தலைமையேற்றார்.


அருள்நிதி ஜெ.சங்கர் அவர்கள்
விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.


செல்வி என்.ஜோசபின் ஜெனிபர் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.


திரு இராம.நாகராஜன் அவர்கள்
விழா நிகழ்வுகளைச் சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

சிறப்புரையாற்றிய
திரு கோ.சித்தர் அவர்கள், தன் உரையில்,
ஓர் இயக்கம், சமூகப் பார்வையோடு செயல்படுமானால்,
அது வளர்ந்தே தீரும் என்று உரைத்ததை உண்மையாக்கி,


சமூகப் பார்வையோடும், சமூக அக்கறையோடும்
செயலாற்றிவரும், பணியாற்றிவரும்
ஏடக நிறுவுநர்
முனைவர் மணி.மாறன் அவர்களை
வாழ்த்துவோம், போற்றுவோம்.23 கருத்துகள்:

 1. ஒவ்வொரு வரிகளும் படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது நண்பரே...

  விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே...

  இனி திரும்புமா அந்த பொற்காலம் ?

  பதிலளிநீக்கு
 2. ஒவ்வொரு 'மறந்தே போய்விட்டோம்' வரிக்கும் 'அடடே ஆமாம்' சொல்லிக்கொண்டே வந்தேன். என் மனைவியின் பிரசவங்களிலும் என் மகன்களுக்கும் பிரசவ நடகாய லேகியம், உரமருந்து கொடுத்திருக்கிறோம். என் அம்மா தந்துள்ளார். வசம்பு என்று சொல்ல மாட்டார்கள். பேர்சொல்லாதது என்று சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
 3. இந்த நிகழவில் அவசரமான பிறிதொரு சொந்த அலுவலால் கலந்துகொள்ள இயலா நிலையை உங்களது பதிவு போக்கியது. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான பகிர்வு ஜெயக்குமார் சகோ . அரிசியில் லட்சம் வகையா பிரமித்தேன். உர மருந்து பற்றி தெரிந்து கொண்டேன். இவற்றை குழந்தை பிறந்த வீட்டில் அம்மா சிலவற்றை உரசிக் கொடுப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 5. படிக்கும் போது அருமையாகத்தான் இருக்கிறது..ஆனால் அந்தப் பொற்காலம் திரும்புமா..? எனும் போது விரக்திதான் வருகிறது

  பதிலளிநீக்கு
 6. நானெல்லாம் இந்த மருந்துகளைச் சாப்பிட்டுத் தான் பத்து வயது வரை வளர்ந்தேன். பிரசவ காலங்களிலும் இந்தக் கைமருந்துகளைச் சாப்பிட்டிருக்கிறேன். வசம்பைப் பெயர் சொல்லாதது என்றே சொல்வார்கள். அல்லது பிள்ளை வளர்ப்பான், பிள்ளை மருந்து என்பார்கள். உரமருந்துகளை இட்லித் தட்டில் வைத்துப் புழுக்கி உரைகல்லில் உரசி தாய்ப்பாலில் கலந்து குழந்தையைக் குளிப்பாட்டியதும் புகட்டுவார்கள். இப்போது எதுவும் இல்லை என்பதோடு இக்காலத்துப் பிள்ளைகளுக்கோ, பெண்களுக்கோ இவற்றில் நம்பிக்கையும் இல்லை. எதற்கெடுக்தாலும் மருத்துவமனை தான். மருத்துவம் தான். ஆங்கில மருத்துவம்!

  பதிலளிநீக்கு
 7. எங்க வீடுகளில் பிரசவம் ஆனதும் வயிற்றுப் புண்ணை ஆற்றப் பச்சை மஞ்சளை நைசாக(நாங்க வெழுமூண) என்போம். அரைத்துச் சாப்பிடக் கொடுப்பார்கள். முதல் பத்து நாட்களும் காலை பிரம்ம முகூர்த்தத்தின் போதே திப்பிலி சுரசம்! உடனே வெற்றிலை போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே இந்நாளைய வழக்கப்படியான காஃபி எல்லாம். பிள்ளை பெற்றவர்களைப் பார்க்க வருபவர்களும் கருப்பட்டி, நல்ல கொழுந்து வெற்றிலை, பூண்டு போன்றவற்றையே கொண்டு வந்து தருவார்கள்.

  பதிலளிநீக்கு
 8. எங்கள் வீட்டில் பேறுகால நடை காயலேகியம் கொடுப்போம்.
  குழந்தைகளுக்கு உரமருந்து உண்டு.
  கஸ்துரி, கோரசனை, மிளகு, பூண்டு, காயம், சுக்கு, அதிமதுரம், கடுக்காய் மாசிக்காய், சாதிக்காய், வ்சம்பு உரமருந்து டப்பாவில் உண்டு.

  வசம்பை நல்ல விளக்கில் சுட்டு கரியாக்கி அதை உரை கல்லில் உரைத்து கால், கையில் தடவி விடுவார்கள் தொப்பிளிலும் தேய்த்து விடுவார்கள்.

  வசம்பு வளையல் கையில் போடுவார்கள் குழந்தைக்கு.
  தினம் எங்கள் வீடுகளில் குழந்தைகளைகளுக்கும், தாயுக்கும் தலைக்கு தண்ணீர் விடுவார்கள். குழந்தைக்கு உரமருந்தும், தாய்க்கு பத்திய சாப்பாடும், லேகியமும் உண்டு. வெற்றிலை தினம் போட வேண்டும்.
  உணவில் நிறைய மிளகு சேர்த்துக் கொள்வார்கள்.


  இப்போது உள்ளவர்கள் படிக்க வேண்டிய பதிவு.
  அருமையான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு வரியும் பிரமிக்க வைக்கிறது ஐயா...

  பதிலளிநீக்கு
 10. படிக்கும் போது வலிக்க தான் செய்தது நண்பரே.

  பதிலளிநீக்கு
 11. நம்காலத்தில் இருந்தவைதானே இப்பழக்கங்கள் ஆனால் நம்மில் யாராவது பின் பற்றுகிறோமா இல்லை பின்பற்ற முடிகிறதா

  பதிலளிநீக்கு
 12. மிக மிக அருமையான பதிவு! பல‌ முத்துக்களைத்தாங்கி வந்திருக்கும் பதிவு! உங்களைப்பாராட்ட வார்த்தைகள் இல்லை! திருமதி.கீதா சாம்பசிவம், திருமதி.கோமதி அரசு சொன்னவற்றை நான் அப்படியே வழி மொழிகிறேன்! அதெல்லாம் ஒரு பொற்காலம்! ஆனாலும் இன்னும் சில வீடுகளில் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அருமையான, இன்றைக்கு மிகத் தேவையான பதிவு.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  ஐயா

  தாங்கள் சொல்வது உண்மைதான்.முன்பு தாயின் வயிற்றில் இருக்கிற குழந்தை ஆணா பெண்ணா என்று பார்க்க மருத்து வீச்சி சொல்வார் உலக்கையை வீட்டில் ஏறியும் மறுபக்கம் நிலத்தில் விழும் விதத்தை வைத்து ஆறிவார்கள் தாயின் வயிற்றில் உள்ள குழந்தையை..தற்போது.இஸ்கேன்.விஞ்ஞானம் எல்லாம் நம்மை அழிக்க வந்தது ஐய்யா மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. ஆமாம் எத்தனையோ மறந்துவிட்டோம்...அருமையான பதிவு...

  கீதா: எங்கள் வீட்டில் என் பிரசவத்தின் போது என் மகனுக்கு உரை மருந்து, எனக்கு லேகியம், பத்திய சாப்பாடு என்றும் கைக்குத்தல் அரிசி என்றும் அம்மா செய்து போட்டார்க்ள். பிரசவத்திற்கு முன்பும்...

  பதிலளிநீக்கு
 16. இனிமேல் வீட்டிலேயே பிரசவம் பார்த்து
  உரை மருந்து கொடுக்க நவீன மருத்துவம் அனுமதி அளிக்குமா!...

  தமிழர்களின் விருப்பங்களுக்குத்
  தமிழக அரசு மதிப்பளிக்குமா!...

  பதிலளிநீக்கு
 17. மிக நல்ல பதிவு.சுமார் அறுபது வயதைக் கடந்த
  பெண்கள் இன்றும் நினைவு கூறுவார்கள்.
  தங்களது பதிவை அச்சிட்டு கல்லூரிகளில்
  விநியோகிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 18. மிக அருமை...

  பல பல தகவல்கள் ...

  பதிலளிநீக்கு
 19. வியப்பான தகவல்களும் இன்றைய அவசர உலகில் நாம் தேடிச்செல்லும் மருத்துவ முரைகளும் குறித்த விவரணையும் நன்று/

  பதிலளிநீக்கு
 20. மிக அருமையான பகிர்வு
  நன்று
  வாழ்த்துகள்!
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 21. எனக்குத் தெரிந்தவரை நான் பிறந்த கிராமத்தில் அந்த நாட்களில் வாழ்ந்த பெரும்பாலனவர்களின் ஜீவனோபாயம் விவசாயம். தமது உணவைத் தாமே தேடித்தயாரித்துக்கொண்டனர். சிறு சிறு வருத்தங்கள் தான் அவர்களுக்கு வந்தது. அதற்கும் கைமருந்து தயாாிக்கும் முறையைத் தெரிந்து வைத்திருந்தார்கள். தொலைக்காட்சி சினிமா என்றில்லாமல் ஆலய திருவிழாக்காலத்தில் இடம் பெற்ற பண்பாட்டுக் கலாசார நிகழ்சிகளுடன் நிறுத்திக்கொண்டு ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்தாா்கள். ஆனந்தமான அந்த நாட்கள் மீண்டும் வரவேண்டும்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு