30 நவம்பர் 2018

கருப்பு, காட்டேரி




கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.

     இக்காலப் பெரியவர்கள் கூறுவதும், எங்கெல்லாம் கும்பாபிசேகங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம், ஒலிப் பெருக்கி மூலம், அடிக்கடி, காற்றில் தவழ்ந்து வரும் முழக்கமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.

     இந்தச் சொல்லாடலின், உண்மைப் பொருள்தான் என்ன?

     இன்று பல பழமொழிகள், தங்கள் உருவிலும், பொருளிலும் திரிந்து வாழ்ந்து வருகின்றன.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்து

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை

     ஆசிரியராய் இருப்பதால், பலமுறை வந்தியதுண்டு.

     வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலையா? என நொந்ததுண்டு.

     பிறகுதான் அறிந்தேன், தெளிந்தேன்.     

     அலைபேசியும், தொலைபேசியும், கடித வசதியும் இல்லாத, அக்காலத்தில், அலையாய் அலைந்து, மணமகன் வீட்டிற்கும், மணமகள் வீட்டிற்கும் நடையாய் நடந்து, பேசிப் பேசியல்லவா, ஒரு திருமணத்தை முடிவு செய்ய வேண்டும்.

ஆயிரம் முறை போய் சொல்லி, ஒரு கல்யாணத்தை நடத்து.

     இப்பழமொழியை, எப்படித் தலை கீழாய் மாற்றிவிட்டார்கள் பாருங்கள்.

வாக்கு அறிந்தவனுக்கு வாத்தியார் வேலை

போக்கு அறிந்தவனுக்கு போலிஸ் வேலை

     இப்பழமொழிகள் எல்லாம், இன்று திரிந்து, அர்த்தங்கள் இழந்து, அணர்த்தங்களை அல்லவா சுமந்து திரிகின்றன.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்

     கோ என்றால் அரசன்

     இல் எனில் இல்லம்

     கோயில் என்றால் அரசனின் வீடு, இல்லம், அரண்மனை

     அரசன் குடியிருக்கும் இடத்தில், குடியிருப்பது பாதுகாப்பானதாகும். திருடர்கள், எதிரிகள் ஆகியோரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அரசனின் ஊரில் குடியிருக்க வேண்டும்.                                                 

     எனவே அரசனின் வீடு இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.

     இதனைப் போலவே, கருப்பு, காட்டேரி என்று கூறிக் கூறி, சிறு வயதிலேயே, பயத்தினை, அச்சத்தினை, நம் குழந்தைகள் மனதில் ஆழ விதைத்து விடுகிறோம்.

     கருப்பு என்றால் என்ன?

     காட்டேரி என்றால் என்ன?

    இதோ விளக்கம் கூறுகிறார் ஒரு அறிஞர், தமிழறிஞர், நாம் முற்றாய் மறந்துபோன ஒரு தமிழறிஞர்.

    வாகன வசதியற்ற, அக்காலத்தில், இரவில் காட்டு வழியில் பயணம் செய்பவர்கள், பார்க்கின்ற, வெட்டப்பட்ட மரங்கள், பட்டுப் போய் நிற்கும் மொக்கை மரங்கள் எல்லாம், இரவில் கருப்பாக, ஆள் நிற்பது போல், பலவித உருவங்களில் தெரியும்.

     எனவே, அந்த கருப்பு உருவங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் எனப் பெரியவர்கள் கூறுவர்.

     இந்தக் கருப்பு உருவங்கள்தான், பேயாக, கருப்பாக உருமாற்றப்பட்டு மக்களை பயமுறுத்தி வருகிறன. 

     கிராமங்களைக் கடந்து இரவில் பயணம் செய்பவர்கள், அக்காலத்தில், அடந்த காடுகள், கழனிகள் வழியே பயணிக்க வேண்டும்.

     அப்படி அவர்கள் கடந்து போகும் பொழுது, காட்டில் உள்ள ஏரிகளில் இருந்து, எழும் காற்றானது, நீரின் சலசலப்பைச் சுமந்து வரும்.

     எனவே அந்தக் காட்டு ஏரியின் சலசலப்பைக் கேட்டு, காட்டு ஏரியின் சத்தத்தைக் கேட்டு பயப்படவேண்டாம் என்று சொல்வார்கள்.

     காட்டு ஏரிக்கு பயப்பட வேண்டாம் என்பதுதான், காட்டேரி என ஒரு பேயின் உருவமாகத் திரிக்கப்பட்டு விட்டது.

     எனவே, பயப்பட வேண்டாம்,

     கருப்புக்குப் பயப்பட வேண்டாம்

     காட்டேரிக்கும் பயப்பட வேண்டாம் என நமக்கு உண்மை நிலையை உணர்த்தி, விழிப்புணர்வு ஊட்டியவர் இவர்.

     ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர். 

தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் முன்னோடி

தன் இறுதிக்கலம் வரை,
புத்தரின் ஞான ஒளி ஏந்தி,
தமிழகத்தில் மண்டிக் கிடந்த,
மூடப் பழக்க வழக்கங்களுக்கு எதிராக ஓயாமல் போராடியவர்.


க.அயோத்திதாச பண்டிதர்.