08 அக்டோபர் 2014

களிறு கண்டேன்


நண்பர்களே, சிறுவர் முதல் முதியவர் வரை, அனைவரும் விரும்பும் ஒரு விலங்கு உண்டென்றால், அது யானையாகத்தான் இருக்கும்.

     யானைகள் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. யானைக் கூட்டங்களைப் பொறுத்தவரை குடியாட்சி கிடையாது. மன்னராட்சிதான். மன்னராட்சி என்பதுகூட தவறு, மன்னி ஆட்சிதான், இராணி ஆட்சிதான்.

     வயது முதிர்ந்த பெண் யானையே கூட்டத்திற்குத் தலைமையேற்று வழி நடத்தும். ஒரு கூட்டத்தில் மூன்று சோடிகள் மற்றும் யானைக் குட்டிகள் என பத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும்.

     ஒரு முறை, ஒரு பெண் யானை கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அப்பொறுப்பு, அப்பெண் யானை இறக்கும் வரை தொடரும்.

     இராணி யானை இறந்துவிட்டால், அடுத்துப் பட்டத்திற்கு வருவது, இராணி யானைக்குப் பிறந்த, மூத்த பெண் யானைதான். இராணி யானையின் சகோதரிக்கு, இந்த வாய்ப்பு, எந்நாளும் கிட்டாது.

     நண்பர்களே, ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? நமது முற்கால மன்னர்கள், இந்த யானைக் கூட்டங்களிடம் இருந்து,  தங்களது அடுத்த வாரிசு யார்? என்பதைக் கற்றுக் கொண்டார்களா? அல்லது நமது மன்னர்களிடம் இருந்து, இந்த யானைகள் கற்றுக் கொண்டனவா? என்பதுதான் புரியவில்லை.
    

கோடைக் காலங்களில், யானைக் கூட்டங்கள், மற்ற யானைக் கூட்டங்களுடன் இணைந்து, பெரிய குழுவாக, உணவு தேடி யாத்திரை செல்வதும் உண்டு.


     நாளொன்றுக்கு பத்து முதல் இருபது கிலோ மீட்டர் தூரம் வரை உணவு தேடி, இந்த யானைகள் பயணிக்கும்.

     உணவென்றால் ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு, 150 கிலோ எடையுள்ள உணவும், தாகம் தணிக்க 40 லிட்டர் தண்ணீரும் தேவை.

    நண்பர்களே, யானையின் கர்ப்ப காலம் எவ்வளவு தெரியுமா? சுமார் இரண்டு ஆண்டுகள். மூளையும், துதிக் கையும் வளர்வதற்குத்தான் அதிக காலம் தேவைப்படுகிறது. மனிதனைப் போல் அல்ல, முதல் குட்டிக்கும், இரண்டாம் குட்டிக்குமான, கால இடைவெளி, குறைந்தது நான்கு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்.

      யானை தன் குட்டியினை ஈன்றெடுக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு தெரியுமா? குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முதல், சில சமயம் சில நாட்கள் வரை, யானையின் பிரசவ வேதனை தொடரும்.
      


நாமெல்லாம், மனைவிக்கோ, சகோதரிக்கோ பிரசவம் என்றால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பிரசவ அறையின் கதவுகளுக்கு வெளியே காத்திருப்போம். மருத்துவர் வெளியே வர மாட்டாரா? நல்ல செய்தியினைக் கூற மாட்டாரா? எனத் தவித்திருப்போம்.

     ஆனால் நண்பர்களே, யானைகள் நம்மைப் போல் அல்ல. பெண் யானை, தன் குட்டியினைப் பிரசவிக்கும் பொழுது, மற்ற யானைகள் அனைத்தும், உடனிருந்து உதவி புரியும். மருத்துவராக, தாதியாக யானைகளே பணியாற்றி, ஓர் புதிய உயிர்க்கு இவ்வுலகினை அறிமுகம் செய்து வைக்கும். குட்டி யானைகள் கூட, தன் தாய் பிரசவிப்பதை உடனிருந்து உன்னிப்பாய் கவனிக்கும்.

     நண்பர்களே, இப்பதிவின் தொடக்கம் முதலே, ஓர் சிந்தனை, ஓர் சந்தேகம், உங்களின் மனதின் ஓர் ஓரத்தில் இருந்து, எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பதை, உணர முடிகிறது.

     எதற்காக இவன், யானையைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கிறான். எல்லாம் தெரிந்த செய்திகள்தானே? என நீங்கள் யோசிப்பது புரிகிறது. தெரிந்த செய்திகள்தான் என்றபோதும், நினைவூட்டுவதற்காகத்தான் கூறினேன்.

     எதற்காக நினைவூட்ட வேண்டும் என்ற அடுத்த கேள்வி எழுகிறதல்லவா? நியாயம்தான்.

      வேறொன்றுமில்லை நண்பர்களே, சில நாட்களுக்கு முன், நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து, ஒரு கோயிலுக்குச் சென்று வந்தேன். அக்கோயிலில் நான் கண்ட காட்சிதான், யானைகள் பற்றிய நினைவலைகளை கிளறிவிட்டு விட்டது.

      நண்பர்களே, நாம் அனைவருமே கோயில்களுக்குச் சென்று வருபவர்கள்தான். கோயிலின் கம்பீரத்தில்,  அதன் பழைமையில், கோயிலில் உள்ள சிற்பங்களின் எழிலில் மங்கித் திளைத்தவர்கள்தான்.

     ஆனாலும், எக்கோயிலிலும் காணாத காட்சி ஒன்றினை, நான் சென்ற, இக்கோயிலில் கண்டேன். கண்ட காட்சியை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதைவிட, வேறு என்ன வேலை எனக்கிருக்கிறது.

     எனது நண்பரும், எம் பள்ளித் உதவித் தலைமையாசிரியருமான திரு அ.சதாசிவம் அவர்கள் மிகப் பெரிய பக்திமான். இறைவனை வணங்குதலையே, தன் முழு நேரப் பணியாகச் செய்து வருபவர்.

     சில நாட்களுக்கு முன், ஒரு நாள் நண்பர்கள் திரு அ.சதாசிவம், திரு வி.பாலசுப்பிரமணியன், திரு எஸ்.தனபாலன் மற்றும் திரு ஜெ.கிருஷ்ணமோகன் ஆகியோருடன் சேர்ந்து புறப்பட்டேன்.

     நண்பர் திரு வி.பாலசுப்பிரமணியன் அவர்கள் மகிழ்வுந்து வைத்திருக்கிறார். திறமையான ஓட்டுநரும் கூட. அவருடன் பயணிப்பதே இன்பம்தான். ஆனால், அவ்வப்பொழுது ஒரு சந்தேகம் தோன்றும். மகிழ்வுந்தில்தான் பயணிக்கிறோமா? அல்லது வானூர்தியில் பயணிக்கிறோமா? என்ற சந்தேகம் மட்டும், அடிக்கடித் தோன்றும்.

    ஐவரும் இணைந்து பயணித்தோம்.  இல்லை, இல்லை பறந்தோம்
    

கும்பகோணத்தில் இருந்து, மயிலாடுதுறை செல்லும் வழியில் ஒரு சிற்றூர். திருபுவனம். பட்டுச் சேலைகளுக்குப் பெயர் பெற்ற இடம். அவ்வூரில் அமைந்துள்ள அழகிய ஆலயம்தான் அருள்மிகு சரபேசுவரர் ஆலயம்.

      சரபேசுவரர் ஆலயமானது, சோழ மன்னனாகிய, குலோத்துங்கச் சோழனால், தனது வட நாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டப் பெற்றதாகும். மிகுந்த கலை நுணுக்கத்துடன் கட்டப் பெற்ற கோயிலாகும் இது. தஞ்சைப் பெரிய கோயிலைப் போலவே, கருவறையின் மேல் விமானம் வானுயர்ந்து நிற்கும்.

     சரபேசுவர்ர் கோயிலின் நாற்புறத்திலும், சுவற்றின் கீழ்ப் பகுதியில், சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள, அழகிய சுதை சிற்பங்கள், மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். அச்சிற்பங்களுள் ஒரு சிற்பம்தான், எங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுத்தது.

     நமது முன்னோர்கள் இயற்கையினையும், கானகங்களில் வாழும் விலங்கினங்களின், செயல்களையும், பழக்க வழக்கங்களையும், எத்துனை தூரம், உன்னிப்பாக கவனித்து, உணர்ந்திருந்தார்கள், அறிந்திருந்தார்கள் என்பதற்கு இச்சிற்பம் ஒரு உதாரணம்.
    





ஒரு பெண் யானை பிரசவிக்கும் காட்சி. யானைக் குட்டி பாதி வெளி வந்த நிலையில் ஓர் சிற்பம். தாய் யானையின் முகத்தினைப் பாருங்கள். எத்தனை எத்தனை உணர்சிகள். ஒரு மகவினை ஈனும் மகிழ்ச்சி ஒருபுறமும், பிரசவகால வேதனை ஒரு புறமும் தெரிகிறதல்லவா.

     தந்தை யானை, கவலை தோய்ந்த முகத்துடன், காதலுடன், தாய் யானையினைக் கீழே விழுந்து விடாமல், வாஞ்சையுடன் அரவணைத்துக் கொண்டிருக்கும், இந்த அற்புதக் கர்ட்சி, நம் நெஞ்சில் ஓர் நெகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறதல்லவா.

     மூன்றாவது யானையைப் பாருங்கள். தாய் யானையின், வாலினைத் தன் துதிக்கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு, குட்டியானை தடையின்றி வெளிவர உதவும் காட்சி, கண்களைக் கலங்க வைக்கிறதல்லவா.

     ஒவ்வொரு யானையின் முகத்தினையும் பாருங்கள். ஒவ்வொரு யானையும், ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை அல்லவா வெளிப்படுத்துகின்றன.

      இச்சிற்பத்தின் முன் அமர்ந்த எங்களுக்கு, சுயநினைவிற்கு வரவே சிறிது நேரம் பிடித்தது.

      நண்பர்களே, ஒரு தேர்ந்த கலைஞனின், கைவண்ணத்தில் உருவான, இந்த அற்புதக் காட்சி, விவரமறியா விஷமிகளின் கரம் பட்டு, சிதைந்து போயிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

      கோயில் என்பது வெறும் கட்ட்டமல்ல. பழங்காலத்தில், இதுவே நெற் களஞ்சியம். இதுவே பொற் களஞ்சியம். இயற்கை இடற்பாடுகளின் போது, இதுவே மக்களின் புகழிடம். திருவிழாக்கள் நட்க்கும் கூடம். கலைகள் அரங்கேறும் மேடை.

     எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பார் தொல்காப்பியர். அதுபோல், நம் முன்னோர் எழுப்பிய, கோயில்களின், ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு செய்தியினை உரைக்கும் வல்லமை வாய்ந்தவை.

     தமிழ் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியை, அதன் தொன்மையை, அதன் பெருமையை, நமக்கு உணர்த்தியவை, கோயில் கல்வெட்டுக்கள்தானே.

     கோயில் சிற்பங்களை, மனத்தால் கூட, காயப்படுத்த நமக்கு உரிமையில்லை என்பதே உண்மை. கற்றோடும், மழையோடும், பெரும் புயலோடும் போராடித் தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சிறப்ங்களை, நாமே சிதைக்கலாமா?


      இனியாவது சிற்பங்களை எட்ட நின்று ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

71 கருத்துகள்:

  1. நல்ல ரசனை. நாங்களும் ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
  2. கோயில் சிற்பங்களை, மனத்தால் கூட, காயப்படுத்த நமக்கு உரிமையில்லை என்பதே உண்மை. கற்றோடும், மழையோடும், பெரும் புயலோடும் போராடித் தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சிறப்ங்களை, நாமே சிதைக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் சிற்பங்கள் சிதைக்கப்படுவது வேதனைகு உரியது
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  3. அண்ணா,
    இந்த பதிவை ஒரே மூச்சா படிக்க முடியாது:) கொஞ்சம்கொஞ்ச படிச்சு பார்கிறேன் தகவல் களஞ்சியமே!!!

    பதிலளிநீக்கு
  4. பழமை மாறாத இந்த மாதிரி கோவில்களில் எனக்கும் இது மாதிரி கவனிக்கப் பிடிக்கும்!

    இன்னொரு விஷயம் என்ன என்றால், நேற்றுதான் ஏனோ யானைகளைப் பற்றிய செய்திகளையும், வீடியோக்களையும் இணையத்தில் தேடித் தேடி ரசித்துக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா!

    யானையைப் பற்றிய இத்தனை அதிசயிக்க வைக்கும் தகவல்களுடன்
    தொடர்ந்து அந்தக் கோயிற் சிற்ப அழகினையும் காணத்தந்து பிரமிக்க வைத்துவிட்டீர்கள்!..

    உண்மைதான் கலாரசனைமிக்க அற்புதக் கலைஞர்களால் எப்போதோ உருவாக்கப்பட்ட அரிய அருங்கலைகள் அழிந்திடாமல் காக்க வேண்டும்.
    நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. களிறு புராணம் படித்து களிப்புற்றேன் !
    த ம 5

    பதிலளிநீக்கு
  7. அய்யா வணக்கம்
    தஞ்சை ஆலயத்தின் வலதுபுற நுழைவாயிலொன்றில் ஒரு யானை ஒருவனை தும்பிக்கையால் வளைத்து அவனது முதுகுத்தண்டு ஒடிந்து இரண்டாய் தொங்கிக் கிடக்கும் சிற்பக் காட்சியைச் சாதாரணமாய் நினைத்திருந்தேன்.
    ஆனால் சில மாதங்களுக்கு முன் தொலைக்காட்சி ஒன்றில் மதம் பிடித்த யானை பாகனைக் கொன்று துதிக்கையால் எடுத்து ஓடும் காட்சியைக் கண்டதும் அங்கு அந்தச் சிற்பம் உயிர்பெற்றது போலத் தோன்றியது.அப்படியே தத்ரூபமாக நான் சிற்பத்தில் கண்ட காட்சி அது!
    சாதாரணமாக நாம் கடந்து போகும் இது போன்ற கலைப்படைப்புகள்,
    நம் அனுபவத்தைத் தொடுகின்ற போது ஏற்படுகின்ற பிரமிப்பைப் தங்களின் படைப்பில் காட்டிவிட்டீர்கள்.
    புதுகை வந்தும் தங்களைக் காணமுடியாதது நானுறாப் பேறு!
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில் எந்தக் கோயிலில், தாங்கள் குறிப்பிடும் யானை சிற்பத்தைக் கண்டீர்கள் என்பதை அறிய விரும்புகின்றேன் நண்பரே
      ஒரு படம் பிடித்து வைத்துக் கொள்வோம்.
      நூல் வெளியீட்டு விழாவிற்குத் தாங்கள் வந்தது தெரியாமல் போய்விட்டது நண்பரே
      அக்டோபர் 26 அன்று மதுரையில் சந்திப்போம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  8. யானைகள் பற்றிய மற்ற தகவல்கள் அறிந்திருந்தாலும், அந்த தலைமைக்கு வரும் தகவ்ல் புதியது மற்றும் நான் அறியாதது ஐயா, நம் முன்னோர்களின் கலை நுணுக்கத்தோடு கோவில் பற்றியும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா, நல்லதொரு தகவல் பதிவுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  9. ஐயா, அற்புதமான பதிவு! தங்களை மனதார பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கோயில் சிற்பங்களை, மனத்தால் கூட, காயப்படுத்த நமக்கு உரிமையில்லை என்பதே உண்மை. கற்றோடும், மழையோடும், பெரும் புயலோடும் போராடித் தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சிறப்ங்களை, நாமே சிதைக்கலாமா?//

    உண்மையான வரிகள்! ஒவ்வொரு கோயிலின் சிற்பங்களும் சொல்லும் கதைகள் எத்தனை எத்தனை!?

    யானைகளைப் பற்றியத் தகவல்கள் தந்து அதனை அப்படியே சிற்பங்களுடன் இணைத்துச் சென்ற விதம் பதிவை அழகுபடுத்துகின்றது நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. //தமிழ் எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சியை, அதன் தொன்மையை, அதன் பெருமையை, நமக்கு உணர்த்தியவை, கோயில் கல்வெட்டுக்கள்தானே. கோயில் சிற்பங்களை, மனத்தால் கூட, காயப்படுத்த நமக்கு உரிமையில்லை என்பதே உண்மை.//

    மிகவும் அருமையான கட்டுரை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. இப்பதிவைப் படிக்கும்போது முன்பு ஒரு பதிவில் யானையை முதலை விழுங்குவதைச் சித்தரிக்கும் ஒரு சிற்பம் பற்றி நீங்கள் எழுதியது நினைவுக்கு வந்தது. இன்னொன்று யானை பிரசவிக்கும் காணொளி ஒன்றினை நான் பதிவிட்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது இந்த பிரும்மாண்ட யானைகளைப்பழக்கும் மனிதன் பற்றியும், அவற்றின் பலம் அறியாமலேயே அடங்கிப் போகும் யானை பற்றியும்சிந்தனை எழுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா , யானைகள் தங்களின் பலம் அறியாமல், மனிதனிடம் , சிறு விலங்கு போல் பழகுவது விந்தைதான்
      நன்றி ஐயா

      நீக்கு
  13. யானைச் சிற்பம் அருமை...
    ரசனையான எழுத்து ஐயா...
    ரசிக்க வைத்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
  14. சிற்பங்களை சிதைக்க கூடாது. அது நம் பொக்கிஷம் பாதுகாத்தல் வேண்டும்

    யானைகளை பற்றிய செய்திகளுக்கு நன்றி. எனக்கு ரொம்ப பிடித்தமானது யானை

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா08 அக்டோபர், 2014

    னியாவது சிற்பங்களை எட்ட நின்று ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்....நன்று நன்று...புது விதமாக ஒரு பதிவு.
    ரசனையே...
    நன்றி. சிற்பங்களும் அழகு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

  16. நமது முன்னோர்கள் இயற்கையினையும், கானகங்களில் வாழும் விலங்கினங்களின், செயல்களையும், பழக்க வழக்கங்களையும், எத்துனை தூரம், உன்னிப்பாக கவனித்து, உணர்ந்திருந்தார்கள், அறிந்திருந்தார்கள் என்பதற்கு இச்சிற்பம் ஒரு உதாரணம். //

    முன்னோர்கள் எவ்வளவு உணர்ந்து...இயற்கையோடு இணைந்து வாழ்ந்து இருக்கிறார்கள். நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன் ஐயா. நன்றி.

    தம 7

    பதிலளிநீக்கு
  17. ஆழ்ந்த தகவல் கட்டுரை,வாழ்த்துக்கள்,சிறிது நேரம் டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரியே இருந்தது.

    பதிலளிநீக்கு
  18. படித்துக்கொண்டே வந்த போது படங்களில் , நீங்கள் என் இப்படி தரையில் உடக்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று யோசித்த படியே படத்தை உற்றுப் பார்த்தேன். பிறகு தான் புரிந்தது. நீங்கள் சுட்டிக்காட்டியிரக்கும் அந்தச் சிற்பம் அவ்வளவு கீழ் பாகத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
    அதை நீங்களும் கவனித்து அதனைப் படம் பிடித்து , அதற்கான விளக்கப் படங்களுடன் பதிவிட்டதற்கு மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

    நம் முன்னோர் எழுப்பிய, கோயில்களின், ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு செய்தியினை உரைக்கும் வல்லமை வாய்ந்தவை.. என்பதை அருமையாக உணர வைத்திருக்கிறீர்கள்.
    த.ம. 8

    பதிலளிநீக்கு
  19. யானைகளைப் பற்றிய சில செய்திகள் எனக்கு புதியது. அந்த சிற்பங்களை அழகாக படம்பிடித்து விளக்கியதோடு மட்டுமல்லாமல், முன்னுரையாக தகவல்களையும் அளித்தது சூப்பர்.
    வாழ்த்துக்கள் ஜெயக்குமார் சார்.

    பதிலளிநீக்கு
  20. கோயில் என்பது வெறும் கட்ட்டமல்ல. பழங்காலத்தில், இதுவே நெற் களஞ்சியம். இதுவே பொற் களஞ்சியம். இயற்கை இடற்பாடுகளின் போது, இதுவே மக்களின் புகழிடம். திருவிழாக்கள் நட்க்கும் கூடம். கலைகள் அரங்கேறும் மேடை.//

    கோயில்களைக் குறித்த இந்த வாசகங்கள் அனைத்துக் கோயில்களிலும் பொறிக்கப்பட வேண்டியவை.

    சிற்பங்கள் நம் மாபெரும் பொக்கிஷங்கள். அவற்றை நம்மால் மீண்டும் உருவாக்க இயலாது. அதன் கையைக் காலை உடைத்து வைப்பதில் நமக்கு என்ன சந்தோஷம் ஏற்படுகிறது? அது தான் புரியவில்லை. கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் இத்தகைய மாபெரும் குற்றங்கள் குறையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரியாரே
      கடுமையான நடவடிக்கைகளே, நமது பழங்கால பொக்கிசங்களைக் காப்பாற்றும்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  21. அன்பின் ஜெயக்குமார்

    அருமையான பதிவு - அரிய தகவல்கள் - அழகிய படங்கள் - அத்தனையும் அருமை. மிக மிக இரசித்தேன். பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  22. அரிய தகவல்களை திரட்டி அறியத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் சகோ மிக்க நன்றி ! இனியா தகவல்களுக்கு
    தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  23. இந்த யானை சிற்பத்தினைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னே அறிந்திருந்தாலும் இது நாள் வரை கண்டு மகிழ சந்தர்ப்பம் அமையவில்லை.. அது தங்களால் கிட்டியது. மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  24. மிகவும் சூப்பரான தகவல்கள்.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  25. அற்புதமான பதிவு. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  26. பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தேவ கோட்டைக்கு வந்திருக்கிறீர்களா
      மகிழ்ச்சி நண்பரே
      வலைப் பதிவர் மாநாட்டில் சந்திப்போம்

      நீக்கு
  27. மிக அற்புதமான தகவல்கள். ஜயக்குமார்.யானைகள் என்றாலே மனம் உருகும். அதுவும் கோவில் சிற்பங்களில் அவைகளுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் இடம் மிக உன்னதமானது. கோவில்களையும் அதன் சிற்ப்பங்களையும் காத்துவந்தாலே நம் தலைமுறைகள் வளம் பெரும். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில்களையும் அதன் சிற்ப்பங்களையும் காத்துவந்தாலே நம் தலைமுறைகள் வளம் பெரும்
      நன்றாகச் சொன்னீர்கள் ஐயா
      நன்றி

      நீக்கு
  28. Dear Jayakumar

    welcome. Really it is fantastic post. It leads to deep silence and tears. wishes.

    பதிலளிநீக்கு
  29. மிகவும் அருமையான இரசிக்க வைத்த, வியக்க வைத்த பதிவு!
    //கோயில் சிற்பங்களை, மனத்தால் கூட, காயப்படுத்த நமக்கு உரிமையில்லை என்பதே உண்மை. கற்றோடும், மழையோடும், பெரும் புயலோடும் போராடித் தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சிறப்ங்களை, நாமே சிதைக்கலாமா?//
    சரியாகச் சொன்னீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  30. யானைகள் வாழ்க்கை முறையையும் அவற்றின் பிரசவ கால செய்ல்பாடுகளையும் படித்தபோது இயற்கையின் அதிசயம்தான் என்ன, படைப்பின் ரகசியம்தான் என்ன என்று எண்ண வைத்தது.

    சரபேசுவரர் கோயிலில் உள்ள, யானை பிரசவ சிற்பத்தினைப் பற்றி படங்களோடு விவரித்தமைக்கு நன்றி! இதேபோன்ற சிற்பத்தினை வேறு ஒரு கோவிலிலும் நான் பார்த்ததாக நினைவு. அப்போதெல்லாம் எனது கையில் கேமரா இல்லை.

    சங்க இலக்கியமான அகநானூறு மூன்று பகுப்புகளைக் கொண்டது. முதல் பகுப்பின் பெயர் “களிற்றியானைநிரை” என்பதாகும். அதாவது களிறின் பெருமித நடை போன்று பாடல்கள் அமைந்தவை.

    த.ம.11

    பதிலளிநீக்கு
  31. யானைகள் குறித்த தகவல்களுடன், கோயில் சிற்பங்களை காக்க வேண்டியதின் அவசியத்தை அழகாக பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  32. 'கண்டேன் களிறை!. கொண்டேன் காதலை!.'
    ஒரு சிற்பம் போன்றே பதிவை செதுக்கி இருக்கிறீர் வாழ்த்துகள் அய்யா!. எனது ஊரிலிருந்து 7 கிமீ தொலைவில் தான் இந்த கோயிலும் சிற்பமும் உள்ளது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது காண்கிறேன். பதிவுக்கு நன்றி!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை ஊருக்கு வரும்பொழுது அவசியம் பாருங்கள் ஐயா
      கருவறைக்கும் வலது புறத்தில் உள்ளது ஐயா
      நன்றி

      நீக்கு
  33. மிக அற்புதம். யானையின் வாழ்க்கை முறையை அறிந்துகொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா09 அக்டோபர், 2014

    மெச்சத்தகுந்த ரசனை. சிற்பி வெற்றி பெற்று விட்டார் ஐயா.

    பதிலளிநீக்கு
  35. உங்களின் அற்புதமான முத்திரைப் பதிவுகளில் ஒன்று வாழ்த்துக்கள்...
    முதலில் நிஜ யானையின் நிழற்படம், தொடரும் சிற்பப் படம்...
    அருமையான அனுபவம்

    இப்படி குனிந்து சிற்பங்களை ஆய்வது எவ்வளவு அவசியம் என்பபதை உணர்த்தியது

    என்போன்றோர் வெகு எளிதாக தவறவிட்டு விடும் சிற்பம் அது...
    நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்... உங்களிடம் இருந்து...

    பதிலளிநீக்கு
  36. ஒரு எழுத்தாளன் சூழலை உற்று நோக்குவான், பதிவான். இது எழுத்தாளனாலேயே முடியும். எல்லோரும் சுற்றுலா போகின்றார்கள் புகைப்படங்கள் எடுக்கின்றார்கள். ஆனால் சார் உங்கள் புகைபடக்கருவியே கதை கூறும். மிருகங்களுக்குள் இருக்கும்மகத்தான குணம்கூட மனிதர்கள் சிலருக்கு இல்லாமல் போகின்றது . மிக்க நன்றி சார் உங்கள் பதிவுத் தொடர்பு கிடைத்தது பாக்கியமாகவே கருதுகின்றேன்

    பதிலளிநீக்கு
  37. மிக ரசனையான பதிவு !

    " நமது முற்கால மன்னர்கள், இந்த யானைக் கூட்டங்களிடம் இருந்து, தங்களது அடுத்த வாரிசு யார்? என்பதைக் கற்றுக் கொண்டார்களா? அல்லது நமது மன்னர்களிடம் இருந்து, இந்த யானைகள் கற்றுக் கொண்டனவா? என்பதுதான் புரியவில்லை. "

    என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் !

    இந்த பதிவை படித்த போது சகோதரர் ஊமைகனவுகள் ஜோசப்விஜு எழுதிய ஒரு கவிதை சட்டென மனதில் ஓடியது... வாழ்வின் இறுதி தருணத்திலிருக்கும் தகப்பனை முதிய யானையாய் உருவகித்து தொடங்கும் கவிதை...

    http://oomaikkanavugal.blogspot.com/2014/06/blog-post_23.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இருக்கும் போதைய
      அருமையுணராமல்,
      இல்லாதானபின் சொல்லித்திரிய,
      எல்லாரிடத்தும் இருக்கின்றன
      இதுபோன்ற நூறாயிரம் கதைகள்! //
      கவிதை வரிகளை மீண்டும் ஒரு முறை ரசித்தேன் நண்பரே
      நன்றி நண்பரே

      நீக்கு
  38. அழகான படங்கள். அருமையான பதிவு.

    முகம் தெரியாத அந்த சிற்பியின் சிந்தனையையும்,செயல் திறனையும் அனைவரும் அறியுமாறு பகிர்ந்தமைக்கு தங்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.....

    பதிலளிநீக்கு
  39. ரசித்தேன். அதிசயித்தேன் .
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  40. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    மிக சரியான தருணத்தில் கோவில் சிற்பங்களின் முக்கியத்துவத்தையும் அதனை பராமரிப்பு செய்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதையும் மிக அழுத்தமாக பதிவிட்டதற்கு பாராட்டுகளும் நன்றிகளும். நம் மாணவ சமுதாயத்திடம் அனைத்து ஆசிரியப்பெருமக்களும் நம்முடைய குழந்தைகளுக்கு அவரவர் பெற்றோரும் இதனை உணர்த்த வேண்டிய தருணமிது. தவறினால் நம் முன்னோருக்கும் நம் சந்ததியருக்கும் பெரும் பாவம் செய்தவர்களாக இருப்போம்.

    பதிலளிநீக்கு
  41. இரசனையுடன் கூடிய அருமையான பதிவு
    அழகான படங்கள்

    பதிலளிநீக்கு
  42. வணக்கம்
    ஐயா.
    படிக்க படிக்க திகட்டாத கட்டுரை.. நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு