22 ஏப்ரல் 2015

மகளுக்காக



என் கணவர் என்னை விட்டுப் பிரிந்தபோது, பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். வாழ்வினையே வெறுத்துப் பல முறை தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் கூட இறங்கினேன்.
  
ஆனாலும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் ஒரு புறம் என்னை தடுத்துக் கொண்டே இருந்தது. தற்கொலைக்கான மனத் தூண்டுதலைத் தவிர்ப்பதற்காக மருத்துவரை நாடி, மனோதத்துவ சிகிச்சையும் பெற்றேன். தற்கொலை உணர்வினையும் தாண்டி, வாழ்ந்தாக வேண்டும், வாழ்ந்தே ஆக வேண்டும் என போராடியதற்கு, ஒரே காரணம், என் மகள், என் அன்பு மகள்.
  
சிறு வயது முதலே துன்பத்தில் உழன்று, வறுமையில் நான் வாடியதைப் போல, என் மகள் மோசமான சூழ்நிலையில் வாழ வேண்டியவளே அல்ல என்று உறுதியாக எண்ணினேன். என் துயரின், என் துன்பத்தின் நிழல் கூட, என் மகள் மீது, விழக்கூடாது என்பதற்காகப் போராடினேன்.


     நண்பர்களே, ஒரு தாயின் மனப் போராட்டத்தை, வாழ்வியல் போராட்டத்தைப் பார்த்தீர்களா.

       தன் மகள் நன்றாக வாழ வேண்டுமே என்ற உயரிய எண்ணம்தான், அத்தாயின் உதிரத்தில் ஒன்றெனக் கலந்து, அவரை வாழத் தூண்டியது.

       அந்த்த் தாய்க்கு சிறு வய்து முதலே, கதைகள் சொல்லுவதில் ஒரு மாபெரும் ஆர்வம் இருந்தது.

      முகபாவங்களை மாற்றியும், குரலில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வந்தும், கதை கேட்கும் சிறுவர்களை, கதையுலகிற்குள்ளேயே அழைத்துச் சென்று விடுவார்.

      வறுமை கொடி கட்டிப் பறந்த சோதனையான காலகட்டத்தில், ஓர் நாள், ஓர் ஊருக்குச் செல்வதற்காக, தன் மகளுடன், தொடர் வண்டி நிலையத்திற்குச் சென்றார்.

      சென்ற பிறகுதான் தெரிந்தது, தொடர் வண்டி, ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு மணி நேரம், தாமதமாகத்தான் வந்து சேரும் என்பது புரிந்தது.

       நான்கு மணி நேரத்தினை, தொடர் வண்டி நிலையத்திலேயே, செலவிட்டாக வேண்டும். மகளோ, அம்மா, ஏதாவது ஒரு கதை சொல்லேன் எனக் கேட்கத் தொடங்கினாள்.

       விளையாட்டாகத்தான் ஒரு புது கதையினை, அப்பொழுதே கற்பனை செய்து, சொல்லத் தொடங்கினார். மனதில் கற்பனை ஊற்றெடுத்து வழியத் தொடங்கியது.

      மனதில் தோன்றிய கதைக்கு உரு கொடுத்து, வார்த்தைகளாக்கி, சுடச் சுட, தன் மகளுக்குக் கூறத் தொடங்கினார்.

    மனதில் கதை உருப்பெற்றுக் கொண்டேயிருந்தது. வார்த்தைகள், கேட்போரைக் கவர்ந்து, ஒரு மாயக் சுழலுக்குள், இழுத்துச் செல்லும், தூண்டில் வார்த்தைகளாய் வெளி வந்த வண்ணம் இருந்தன.

      நான்கு மணி நேரம் கடந்து சென்றதே இருவருக்கும் தெரியவில்லை. தொடர் வண்டி வந்த பிறகுதான் புரிந்தது, நான்கு மணி நேரம் முழுதாய் கடந்திருப்பது தெரிந்தது.

      தொடர் வண்டியில் ஏறிய தாயின் மனதில், ஓர் ஆசை, வண்டியின் வேகத்தினையும் தாண்டி வேகமாய் மனதிற்குள் ஓடத் தொடங்கியது. இக் கதையினை நூலாக அச்சிட்டு வெளியிட்டால் என்ன?

      மனதில் இருக்கும் கதையினை முதலில், வெள்ளைத் தாட்களில் இறக்கி வைத்தாக வேண்டும்.

       தட்டச்சு செய்வதற்கு அவரிடம் தட்டச்சு இயந்திரம் கிடையாது. ஏதேனும் தட்டச்சு நிலையத்திற்குச் சென்று, தட்டச்சு செய்து வாங்குவதற்கு, கையில் காசும் சுத்தமாய் கிடையாது. என்ன செய்வது, காசில்லாமல், எப்படி தட்டச்சு செய்வது என்று புரியவில்லை.

      ஒரு நாள், ஒரு காபி கடையில், பழைய தட்டச்சு இயந்திரம் ஒன்றைக் கண்டார். இருந்த காசை கொடுத்து, ஒரு காபியை வாங்கிக் குடித்துக் கொண்டே யோசித்தார்.

       சில பக்கங்களைத் தட்டச்சு செய்ய வேண்டும். தாங்கள் அனுமதி கொடுத்தால், அவ்வப்பொழுது கடைக்கு வந்து, நானே தட்டச்சு செய்து கொள்வேன். அனுமதி தருவீர்களா?

      அக்கடைக் காரருக்குத் தாராள மனசு. தட்டச்சு செய்து கொள்ளுங்கள் என்றார்.

      அதன் பின், பல நாட்கள், அக் கடையே அவரது இருப்பிடமாய் மாறிப் போனது. மனதில் இருந்த கதை, மெல்ல மெல்ல, வார்த்தைகளாய், ஒவ்வொரு எழுத்தாக, வெள்ளைத் தாட்களில் முகம் காட்டத் தொடங்கியது.

      தட்டச்சுப் பணி முடிந்த பின்னர்தான், அடுத்த பிரச்சினை மெல்ல தலை தூக்கியது. எவ்வாறு நூலாய் வெளியிடுவது?

      ஒவ்வொரு பதிப்பகமாய் கால் தேயத் தேய, ஏறி இறங்கினார். கதையினைப் படித்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை.

வெளியிட முடியாது
வெளியிட முடியாது
வெளியிட முடியாது

சொல்லி வைத்தாற்போல், பதிப்பகத்தார் அனைவரும், ஒரே பதிலை, ஓரெழுத்துக் கூட மாறாமல் கூறினர்.

        அசரவில்லை அவர். மேலும், மேலும் பதிப்பகங்களைத் தேடித் தேடி அலைந்தார். அயராமல் ஒவ்வொரு படியாய் ஏறி இறங்கினார்.

புளூம்ஸ்பரி

     ஓர் சிறிய  பதிப்பகம். இவரது கதையினை பதிப்பிக்க முன்வந்தது. ஆயிரம் பிரதிகளுக்கு இரண்டு ஆயிரத்து 250 பவுண்டுகளைத் தர முன்வந்தது.

        அந்தத் தாய் மகிழ்ச்சி வானில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கினார். பணம் பெரிதல்ல. நூல் வெளி வரட்டும். காத்திருந்தார்.

        நூல் வெளிவந்தவுடன், யாருமே எதிர்பாராத ஓர் அற்புதம் நிக்ழ்ந்தது. நூல்கள் அனைத்தும் வெளிவந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்து விட்டன. உடனே அடுத்த பதிப்பு, உடனே அதுவும் விற்றுத் தீர்ந்தது. பதிப்புகள் தொடரத் தொடர, அனைத்தும் விற்றுக் கொண்டே இருந்தது.

       இங்கிலாந்து நாடே நூலினைப் படித்து மகிழ்ந்தது. தியேட்டர்கள், வீடியோ விளையாட்டுக்கள் என, அலையாய் அலைந்து கொண்டிருந்த மாணவ்ர்கள், புத்தகக் கடையினைத் தேடத் தொடங்கினர்.

       விரைவாய், வெகு விரைவாய் உலகையே வலம் வரத் தொடங்கியது அந்நூல்.

40 கோடிப் பிரதிகள் விற்பனை. 700 கோடி பவுண்டுகள் வசூல்.

ஹாரி பாட்டர்.

மகளுக்காகக் கதை எழுதிய அந்தத் தாய்


ஜே.கே.ரௌலிங்


      

84 கருத்துகள்:

  1. ஒரு வெற்றியின் கதை. தெரிந்த கதைதான் எனினும் படிக்கும்தொரும் நம்பிக்கை பிறக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் நீங்கள் வல்லவர் ஐயா...

    அருமை... அருமை... ரசித்தேன் மீண்டும்...

    பதிலளிநீக்கு
  3. வெற்றியின் ரகசியம் யாருக்குமே தெரியாது',முடிவில்?

    பதிலளிநீக்கு
  4. பிற்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராகும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆரம்ப நாட்களில் இதுபோல எவ்வளவோ சோதனைகளும் வேதனைகளும்தான் இருந்திருக்கும்.

    அவற்றை இவரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் மூலம் மிக அருமையாக தங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லியுள்ளது அழகு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா எப்பேர்ப்பட்ட இன்னல்களைக் கடந்து சாதித்திருக்கிறார்
      நன்றி ஐயா

      நீக்கு
  5. எந்த ஒரு பிரம்மாண்டமான நதியின் தோற்றமும் சிறு ஓடைதான் என்பது போல மகத்தான வெற்றியின் துவக்கமும் எளிமையாகத்தான் இருந்திருக்கிறது. சிறப்பான பதிவிற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே,
    இந்த அம்மையாரை பற்றி பலமுறை படித்திருந்தாலும் தங்களின் எழுத்தில் மீண்டும் படிப்பது மகிழ்ச்சியை தருகிறது.
    த ம +1

    பதிலளிநீக்கு
  7. வழக்கம் போல தங்களது பாணியில் அழகாக நகர்த்திக்கொண்டு போனவிதம் அருமை நண்பரே படிக்கும்போது தன்னம்பிக்கை வருகிறது.
    தமிழ் மணம் 5
    முதல் நபராக படித்து விட்டேன் நண்பரே கருத்துரை இடமுடியாத சூழல்.

    பதிலளிநீக்கு
  8. கரந்தை சரவணன்22 ஏப்ரல், 2015

    என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    ஹாரிபாட்டர் கதைத் தொகுதிகளை எழுதிய ஜே.கே.ரவுலிங் என்ற பெண்மணியால் இன்று உலகில் உள்ள பல குழந்தைகளும் பெரியவர்களும் புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு மாறிய அதிசயம் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். அதற்காகவே அப்பெண்மணிக்கு புத்தகம் வாசிக்கும் அனைவரின் சார்பாக கண்டிப்பாக நன்றி செலுத்துவோம். வழக்கம் போல் தங்களது பதிவு விறுவிறுப்பாகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. Arputham thagalin eluthil oru vasikarm iruku. vaalthukal. qt

    பதிலளிநீக்கு
  10. நான் இருக்கும் மதுரையில் JKR துணிக்கடை ரொம்ப பிரசித்தம் ,உங்களால் இன்னொரு JKR யும் அறிந்து கொண்டேன் ,நன்றி :)

    பதிலளிநீக்கு
  11. தெரிந்த கதைதான் எனினும் அதைத் தங்கல் எழுத்தில் வாசிக்கும் போது சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது!!!

    பதிலளிநீக்கு
  12. எப்பொழுதும் போல சுவாரசியமாய் எழுதியிருக்கிறீர்கள்..அருமை அண்ணா, நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    ஐயா
    தங்களின் கருத்தில் சொல்லிய விதம் படிக்க படிக்க படிக்கத்தான சொல்லுது.. மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. தாய்மையின் பாசத்தையும் கம்பீரத்தையும் மிக அழகாய்ப்பதிவு செய்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா23 ஏப்ரல், 2015

    ஆம் மிகப் பிரபல்யம்.
    பதிவிற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. தன்னம்பிக்கை தரும் வரிகள்

    பதிலளிநீக்கு

  17. தன்னம்பிக்கை தந்தமைக்கு
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு
    சிறந்த வழிகாட்டல்
    தங்கள் பதிவை
    http://yppubs.blogspot.com/2015/04/blog-post_23.html
    எனது தளத்திலும் அறிமுகம் செய்துள்ளேன்!

    பதிலளிநீக்கு
  19. உலகபுத்தக தினத்தை ஒட்டிய இந்தப் பதிவு சிறப்பானது---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  20. கட்டுரையை ஆரம்பிக்கும்போதே கதையின் நாயகி இவராகத் தான் இருக்கும் என நினைத்தேன். அவ்வாறே இருந்தது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எதிர்கொள்ளப்படும் அனுபவங்கள் பாடமாக நம்மால் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதற்கு இவரும் ஓர் உதாரணம்.

    பதிலளிநீக்கு
  21. அன்பின் ஜெயக் குமார்

    அருமையான பதிவு - அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. அனுபவங்கள் பகிரப் பட வேண்டும் என்பதற்கு இப்பதிவு ஒரு சான்று.
    ஹாரி பாட்டரின் கதைகளை அனைத்துக் குழந்தைகளும் ப்டிக்க வேண்டும் - மகிழ வேண்டும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

  22. இன்று உலகம் முழுக்க பேசப்படும் ஹாரிபாட்டர் உருவான கதையையும், உருவாக்கியவர் ஒரு தாய் (ஜே.கே. ரௌலிங்) என்பதனையும், உங்கள் யுத்தியில், அழகு தமிழில் சுவையாகச் சொன்னதற்கு, எனது பாராட்டுக்கள்.
    த.ம.12

    பதிலளிநீக்கு
  23. அருமை. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்த நூல் ஹாரி பாட்டர் . ரௌலிங்கின் முயற்சியை அப்படியே படம்பிடித்து காட்டிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  24. ஒரு தாயின் உள்ளக் கிடக்கை அழகாக வெளிப்பட்டிருக்கின்றது
    ஹாரி பாட்டர் கதைகள் உருவாகிய விதத்தினை அறிந்து கொண்டேன்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  25. தன் மக்கள் துன்பத்தில் உழலக் கூடாது என்னும் எண்ணம் எல்லாத் தாய்மார்களுக்கும் இருப்பதுதான் , ச்திர்ஷ்டம் வந்தால் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரும் என்பது சரிதான் இந்தமாதிரி ஃபாண்டசிக் கதைகள் அன்ங்கிலத்துக்கு வேண்டுமானால் புதிதாய் இருக்கலாம் ஜெ.கெ ரௌலிங் அதிர்ஷ்டக்காரிதான்

    பதிலளிநீக்கு
  26. மேலே அதிர்ஷ்டம் சதிர்ஷ்டம் என தவறாக தட்டச்சாகி விட்டது மேலும் ஆங்கிலத்துக்கு என்றிருந்திருக்க வேண்டும் , தவறுகள் பொறுக்கப் பட வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  27. படிக்கும் போதே யார் பற்றிய பதிவென்பது தெரிந்தாலும் உங்களின் அருமையான நடைக்காக,
    த ம 14

    பதிலளிநீக்கு
  28. ஆம், சாதனை வாழ்வுக்கு ஒரு உதாரணம் இவருடையது.

    பதிலளிநீக்கு
  29. ஹாரிபாட்டர் உருவான வரலாற்றை சுவாரஸ்யமாக பகிர்ந்தவிதம் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. தெரிந்த கதை என்றாலும் படிக்கச் சுவைதான். தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். படிக்கையிலேயே ஹாரிபாட்டர் தான் என்று புரிந்தும் விட்டது.

    பதிலளிநீக்கு
  31. அருமையாக சொல்லியுள்ளீர், உலக புத்தக தினத்தில் இப்படி ஒரு பதிவு, நன்றி.

    பதிலளிநீக்கு
  32. அருமையாக சொல்லியுள்ளீர், உலக புத்தக தினத்தில் இப்படி ஒரு பதிவு, நன்றி.

    பதிலளிநீக்கு
  33. புதிய தகவல். அறிந்து கொண்டேன். அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

    பதிலளிநீக்கு
  34. அருமையான பதிவு தாய்மையின் தன்மையை அழகாக உணர்த்தும் கதை. சிறுவர்கள் அனைவரையும் ஆக்கிரமித்த அற்புதமான கதை.
    பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
  35. போராட்டத்தின் வெற்றித்தாய்! அருமையாக பகிர்ந்தீர்கள் ஐயா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. வெற்றியின் ஒவ்வோர் இரகசியத்திலும் ஏராளம் வலிகள் இருப்பது உண்மைதான் ஹரிபொட்டர் கதைகள் படித்து இருக்கிறேன் அதைவிட அருமையாய் தங்களின் கதையின் நகர்வு அருமை ஐயா !

    இன்னும் எழுதுங்கள் இவ்வுலகை மாற்றுங்கள்
    தன்னம்பிக் கையூட்டித் தாங்கு !
    தம 19

    பதிலளிநீக்கு
  37. தாய்மையின் வெற்றி... ஒருவரிடம் எத்தனையோ திறமைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்கொணர எடுக்கும் முயற்சிகள்தாம் வெற்றியின் பாதைக்கு அழைத்துச்செல்லக்கூடியவை. அந்த வழியைக் கண்டறிந்த ஜே.கே.ரௌலிங் பெருத்த பாராட்டுக்குரியவர். தன்னம்பிக்கையூட்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  38. தன்னம்பிக்கைக்கு உதாரணமான பெண் ரவுலிங். தங்கள் பதிவில் அவரது வாழ்க்கையை காண்பதில் மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
  39. தொடர் வண்டியின் வேகத்தில் தொடர்ந்து படிக்க வைக்கிறது தங்கள் பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  40. nice expression in tamil about Author of Harry potter

    பதிலளிநீக்கு
  41. உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  42. ஏற்கெனவே கேள்விபட்ட கதை தான் என்றாலும் திரும்ப திரும்ப படிக்குமளவுக்கு ரெம்ப சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்....பாராட்டுக்கள்,,...உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு