02 ஏப்ரல் 2015

ஆனை மலை


நண்பர்களே, நலம்தானே.

      கடந்த பல வருடங்களாக, சில நூறு முறையாவது மதுரைக்குச் சென்று வந்திருப்பேன்.

      ஒவ்வொரு முறை, ஒத்தக் கடையைக் கடந்து செல்லும் பொழுதும், நீண்டு நெடிதுயர்ந்து நிற்கும் ஆனை மலையைக் கண்டு வியப்பு அடைந்திருக்கிறேன்

      இயற்கை தந்த கொடையை எண்ணி எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். ஆனாலும் ஆனை மலையை ஒரு முறையாவது தொட்டுப் பார்த்துவிட வேண்டும், ஆனை மலையில காலார நடந்து மகிழ வேண்டும், ஆனை மலையில் மோதித் திரும்பும் காற்றை சுவாசித்து இன்புற வேண்டும் என்ற எனது எண்ணம், நிறைவேறாமல், பகற் கனவாகவே நீடித்து வந்தது.

     சில நாட்களுக்கு முன், நண்பரும், கரந்தைத் தமிழ்ச சங்கத் துணைத் தலைவருமான திரு இரா.சுந்தர வதனம், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை ஆசிரியரும் நண்பருமான திரு மு.பத்மநாபன் ஆகியோருடன், மதுரைக்குச் செல்லும் ஓர் வாய்ப்பு கிடைத்தது.

     மதுரை சென்றோம். வந்த அலுவல் முடிய இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருந்த வேளையில், என்னுள் ஆனை மலை எட்டிப் பார்த்தது.

      இரண்டு மணி நேரம், வெறுமனமே, அமர்ந்திருப்பதை விட, ஆனை மலைக்குச் சென்று வந்தால் என்ன? என்னும் எண்ணம் தோன்றியது. விருப்பத்தைத் தெரிவித்தேன். சற்றும் தயங்காது, இருவருமே, வாருங்கள் சென்று வருவோம் என்றனர்.

ஆனை மலை

     சுமார் நான்கு கிலோ மீட்டர் நீளமும், 1200 மீட்டர் அகலமும், 400 மீட்டர் உயரமும் கொண்ட மாமலையாகும். சற்று தொலைவில் இருந்து பார்த்தால், யானை ஒன்று படுத்தபடி ஓய்வெடுப்பதைப் போல் தோன்றுவதால், ஆனை மலை என்ற பெயரினைப் பெற்ற மலை.
    


அக்காலத்தில், அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஊருக்கு வெளியே, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ள, இம் மலை, சமணர்களின் தங்குமிடமாக இருந்துள்ளது.

     யானையின் துதிக்கையைப் போல் தோன்றும், மலைப் பகுதியில், இயற்கையாய் அமைந்த சிறு குகையில், பாறையினையே, கட்டில் போல் செதுக்கி, சமணர்கள் தங்கள் படுக்கையாகப் பயன்படுத்தி உள்ளனர். இவைகள் சமணர் படுக்கைகள் என்றழைக்கப் படுகின்றன.

     நண்பர்களே, சமணர் படுக்கையிலன் அருகே காட்சியளிக்கும் கவ்வெட்டில், பொறிக்கப் பட்டுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா?

இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

    ஒன்றும் புரியவில்லைதானே?

    இவம் எனில் சமஸ்கிருத்ததில் யானை என்று பொருள்.

  குன்றம் என்றால் மலை என்பது தெரியும்.

    எனவே இவகுன்றத்து என்றால் யானை மலை என்று புரிகிறதல்லவா.

    உறையுள் எனில் தங்குமிடம். பாதந்தான் எனில் பாய் அல்லது படுக்கை என்று பொருள்.

    அத்துவாயி அல்லது அட்டவாயி எனில் சொற்பொழிவாளர்கள் என்று பொருள்.

    ஏரி ஆரிதன் மற்றும் அரட்ட காயிபன் என்னும் சொற்கள் இரு சமணத் துறவிகளின் பெயர்களாகும்.

     ஆனை மலையில் தங்கிய, இரு சமணத் துறவிகள், சொற்பொழிவாற்றி, தங்கள் சமயத்தை பரப்பினர் எனப் பொருள் கொள்ளலாம் அல்லவா.

     ஆனை மலையை ஒட்டியுள்ள, நரசிங்கப் பெருமாள் குடவறைக் கோயில், கி.பி.770 ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட, மாறஞ்சடையான் பராந்தக நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனால் உருவாக்கப் பட்டதாகும்.

     எனவே இம் மலையும், மலை சார்ந்த இடமும் நரசிங்க மங்கலம் என்றே அழைக்கப் பட்டது. இதுவே பின்னர் சுருங்கி நரசிங்கம் ஆயிற்று.

     இதோ ஒத்தக் கடையை நெருங்கி விட்டோம். ஒத்தக் கடை வீதி வழியாக, ஆனை மலையின் பின்புறம் பயணித்தோம். சிறிது தொலைவிலேயே, ஒரு பெயர்ப் பலகை எங்களை வரவேற்றது.

சமணர் சிற்பங்கள் ஆனை மலை.

    மகிழ்வுந்தில் இருந்து கீழிறங்கினோம். மலையின் அடிவாரத்தை நோக்கி, ஒரு சிமெண்ட் தரை.

    

மனதில் மகிழ்ச்சியை உணர முடிந்தது. நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சி.

    மலை அடிவாரத்தில் இருந்து. மலையிலேயே செதுக்கப் பெற்ற, குறுகிய படிக் கட்டுகள் மேல் நோக்கிச் செல்ல, மெதுவாக ஏறினோம். படிக்கட்டுகளை ஒட்டி, ஒரு இரும்புக் கைப்பிடியும், நீண்டு கொண்டே சென்றது.

    



படிகளில் ஏற, ஏறத்தான் வயதாகி விட்டது என்ற உண்மை உறைக்கத் தொடங்கியது. தினசரி மேற்கொண்டிருந்த, அதிகாலை நடைப் பயிற்சியை, சமீப காலமாக, சரியாகத் தொடராத்தன் பலனை அனுபவிக்க வேண்டியிருந்தது.

     இனி காலையில் ஒழுங்காக நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என் மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

     படிகளின் நிறைவில், ஒரு இரும்புக் கதவு, எங்களுக்காகத் திறந்தே இருந்தது.

    


ஒரு சிறு சம தளம். இடது புறத்தில் குகை போன்ற அமைப்பு. உள்ளே நுழைந்ததுமே தெரிந்து விட்டது, இது குகையல்ல.

     நீண்ட நெடிய கற் பாறைகளின் மீது, ஒரு பெரிய்ய்ய்ய பாறையை தூக்கி வைத்தாற் போன்ற அமைப்பு.

    



மீண்டும் வெளியே வந்து பார்த்த போதுதான் மெதுவாக ஓர் எண்ணம் தோன்றியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இம் மலைப் பகுதியில், ஒரு மிகப் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக, மலையின் மீதிருந்த, ஒரு பெருங் குன்று அளவிலான பாறை, பெயர்ந்து, அடிவாரத்தை நோக்கி உருண்டு வரும் போது, இவ்விடத்தில் உள்ள பாறைகள் தடுத்ததால், அப்பாறைகளின் மீதே, அக் குன்று, நிலைத்து நின்று, ஓய்வெடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது.



இக்குன்றின் முகப்பில், வரிசையாய் கண்கவர் புடைப்புச் சிற்பங்கள். மகாவீரர், பார்சுவ நாதர், பாகுபலி மற்றும் அம்பிகா.

     கி.பி.9 அல்லது கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக்க் கருதப் பெரும், இச்சிற்பங்களின் கீழ், தமிழ், கிரந்தம், வட்டெழுத்து ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

     மெய்மறந்து சிற்பங்களையே பார்த்துக் கொண்டு நிற்கிறோம்.

    மலையடிவாரத்தில், நரசிங்க பெருமாள் கோயில், எழிலுடன் காட்சியளிப்பதையும் கண்டு களித்தோம்.

   
இவ்வுலகு உள்ள வரை, போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆனை மலையும், அதிலுள்ள சிற்பங்களும்.

     ஆனாலும் நண்பர்களே, மனம் வேதனைப் படத்தான் செய்கிறது. ஆயிரம் ஆண்டுகளாய், நம் முன்னோர்களால் போற்றிப் பாதுகாக்கப் பட்ட ஆனை மலை, பல்வேறு படையெடுப்புக்களாலும், சேதப் படுத்தப் படாத ஆனை மலை,  பழமையின் மகத்துவம் அறியாத, இன்றைய மனிதர்களால், தன் பொலிவினை இழந்து கொண்டு வருகிறது.

     பாறைகளில் பல்வேறு கிறுக்கல்கள். இலை வடிவப் படங்கள், அதனுள் பாயும் மன்மதன் அம்பு என இன்றைய இளைஞர்களின், கை வண்ணங்களை ஆங்காங்கே காண முடிகிறது.

    தமிழகத்தில் பரவி வரும் டாஸ்மாக் கலாசாரம், ஆனை மலையையும் விட்டு வைக்கவில்லை. எங்கு பார்த்தாலும, உடைந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், சிகரெட் துண்டுகள்.

     உலகிற்கு அன்பையும், அகிம்சையையும் மட்டுமே போதித்த, மாமனிதர்களின் காலடிச் சுவடுகள், பதிந்துள்ள இம் மலையில், இங்குள்ள பாறையில் காட்சியளித்துக் கொண்டிருக்கும், மகாவீரர், பார்சுவ நாதர், பாகுபலி மற்றும் அம்பிகா ஆகியோரின் கண் முன்னே, நாள்தோறும் அரங்கேறும், ஒழுக்கச் சீர்கேடுகள், மனதை உளி கொண்டு ரணப் படுத்துகின்றன.

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, நம் மூதாதையரின் பண்பாடு, இக்கால நவநாகரிக மனிதர்களிடம், எள்ள்ளவும் இல்லையே என்பதை எண்ணும்போது, ஒரு ஏக்கப் பெருமூச்சுதான் விடையாய் வெளி வருகின்றது.

     நண்பர்களே, ஆனை மலை, நம் முன்னோர், நமக்கு வழங்கிச் சென்றிருக்கும் கலைச் செல்வம், காலப் பெட்டகம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது, ஒரு முறையேனும், ஒரே ஒரு முறையேனும், ஆனை மலையின் படிகளில் ஏறி இறங்குங்கள்.

     நம் முன்னோர்களின் காலடிச் சுவடுகளைத் தங்கி நிற்கும், இம் மலையில், அம் மாமனிதர்களின் காலடிச் சுவடுகளோடு, நம் பாதச் சுவடுகளும் ஒன்றெனக் கலக்கட்டும்.

வாழ்க ஆனை மலை.

84 கருத்துகள்:

  1. ஆனைமலையில் நீங்கள் போனதிற்கு எதிர்பக்கத்தில்தான் விவசாயக் கல்லூரி இருக்கிறது. அதில் ஏறக்குறைய 5 வருடம் பணி புரிந்தேன். அங்கேயே இருக்கும் குவார்ட்டர்ஸ்சில்தான் குடியிருந்தோம். தினமும் ஆனைமலை மீதுதான் கண்விழிப்போம். அந்தப் பக்கத்தில் இருந்து இந்த மலை மீது பல முறை ஏறிப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சென்ற வழியில் போனதில்லை. கோவிலுக்கு மட்டும் ஒரு தடவை போயிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனை மலையின் நிழலில் ஐந்து வருடங்கள்
      கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா
      நன்றி

      நீக்கு
  2. வணக்கம் நண்பரே நல்லதொரு வரலாற்று விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நரசிங்கத்தில் யானையை சுற்றிக்கொண்டே ஆறு மாதகாலம் வாழ்ந்த அனுபவம் எமக்கு உண்டு நண்பரே..
    //பாறைகளில் பல்வேறு கிறுக்கல்கள். இலை வடிவப் படங்கள், அதனுள் பாயும் மன்மதன் அம்பு என இன்றைய இளைஞர்களின், கை வண்ணங்களை ஆங்காங்கே காண முடிகிறது//
    தாங்களின் இந்த வேதனையை நானும் அனுபவித்ததுண்டு.
    வாழ்க யானை மலை.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனை மலையைச் சுற்றிக் கொண்டே ஆறு மாதங்கள்
      மகிழச்சியாக இருக்கிறது நண்பரே
      நன்றி

      நீக்கு
  3. அருமையான படங்களுடன் அற்புதமான படையெடுப்பு. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. எத்தனை வருடங்கள் மதுரையிலேயே இருந்திருக்கிறேன்! தாண்டிச் சென்றிருக்கிறேனே தவிர, ஏறிப் பார்த்ததில்லை. நல்ல அனுபவம்.

    மகாவீர் ஜெயந்தி அன்று சிறப்புப் பதிவா ! சபாஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகா வீர் ஜெயந்தியை இப்பதிவுடன் நான் இணைத்துப் பார்க்க வில்லை நண்பரே
      எதிர்பாராமல் அமைந்ததுதான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  5. முன்னோர்களின் நினைவாக இருக்கும் இம்மாதிரியான கால பொக்கிடங்களை கில்லர்ஜி சொல்வது போல சிதைக்கும் இளைய சமுதாயங்கள் இவையெல்லாம் வரலாற்று சின்னங்கள் என்று உணரவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளைய சமுதாயதினர் அவசியம் உணர வேண்டும்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  6. அன்புள்ள கரந்தையார் அவர்களுக்கு,

    ஆனை மலை பற்றி அழகாக பாடலுடன் விளக்கம் கொடுத்தது அந்த மலையைப் பார்க்க ஆவலைத் தூண்டியது. புகைப்படங்கள் பார்க்கின்ற பொழுது நீங்கள் சொல்வதின் ஆழம் புரிந்தது.

    சமணர்கள் வாழ்ந்த வாழ்க்கையை கண்முன் நிறுத்தினீர்கள்!

    நன்றி.
    த.ம. 4.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் ஆனை மலைப் பயணத்தின் மூல அறிய செய்திகள் அறியப் பெற்றோம்

    பதிலளிநீக்கு
  8. தமிழகத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று ஆனைமலை. சமணர்களின் செல்வாக்கு அதிகம் இருந்ததை நிரூபிக்கும் இடங்களில் ஒன்று இந்த மலை. வரலாற்று நோக்கில் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில்பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு பதிவு. மதுரையில் மூன்று வருடங்கள் படித்தாலும் ஒரு முறை கூட ஆனை மலை சென்றதில்லை. பேருந்தில் செல்லும் போது பார்த்ததுதான்.பாதுகாக்கப்பட வேண்டிய கலைப் பொக்கிஷங்கள் பற்றி அலட்சியம் காண்பிப்பது தமிழனின் பாரம்பரியமாகி விட்டது. கிரானைட் கொள்ளையர்களிடமிருந்து தப்பியதே பெரிய விஷ்யம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனை மலை தப்பித்ததே பெரிய விசயம்தான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  10. போய் வர வேண்டும் ஒரு முறையாவது/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் ஒரு முறையாவது போய் வாருங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  11. ஆனை மலை பற்றி
    அறிய வைத்த
    அருமையான பதிவு
    இது!

    பதிலளிநீக்கு
  12. சில வருடங்களுக்கு முன் இந்த மலையை சுரண்ட ,சிற்பக் கலை நகரம் என்ற பெயரில் திட்டமிட்டார்கள் ,மக்களின் போராட்டத்தால் அது தடுத்து நிறுத்தப் பட்டது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களின் போராட்டம் தொடர்ந்து இம்மலையினைக் காக்கட்டும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  13. ஆனைமலைக்கு எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக்க மகிழ்ச்சி.. பதிவில் திரு. சுந்தரவதனம் அவர்களையும் திரு.பத்மநாபன் அவர்களையும் கண்டதும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  14. பார்க்க வேண்டிய இடத்தை படங்களுடன் அழகாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அடியேன் பிறந்த இடம் இந்த பகுதி என்றாலும் சிறு வயதிலேயே மதுரையை விட்டு வெளியேறி பங்களூரில் வளரும் நிலை. சென்ற வருடம் மதுரைக்கு சென்ற போது இந்த மலையை கண்டேன். அப்போது அருகில் இருந்த உறவினரிடம் இது ஆனை போல் இருகின்றதே, இதை ஏன் பசுமலை என்று அழைகின்றார்கள் என்று கேட்டதற்கு அது வேறு இது வேறு என்ற பதில் கிட்டியது. அருமையான பதிவு . கரந்தை கரந்தை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு முறை ஆனை மலையைப் பாருங்கள்

      நீக்கு
  16. அய்யா...

    ஆனை மலை பற்றிய இந்த பதிவை படித்துதான் அதன் இத்தனை சிறப்புகளை அறிந்துக் கொண்டேன்...

    இது போன்ற பண்டைய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பராமரிக்கப்படாமல் கிடப்பதும், பொறுப்பற்ற பொதுஜனங்கள் கண்டபடி கிறுக்கி வைப்பதும் நம் நாட்டின் சாபக்கேடு !

    நன்றி
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  17. ஆனை மலை ..... மிகவும் மலைக்க வைக்கும் பதிவாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  18. அருமையான விவரணம்! ஆனை மலையைப் பற்றிய அரிய தகவல்களை சுவாரஸ்யமாகத் தந்தைமைக்கு மிக்க நன்றி. ஒரு அருமையான இடத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  19. 'மெதுவாக ஓர் எண்ணம் தோன்றியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இம் மலைப் பகுதியில், ஒரு மிகப் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக, மலையின் மீதிருந்த, ஒரு பெருங் குன்று அளவிலான பாறை, பெயர்ந்து, அடிவாரத்தை நோக்கி உருண்டு வரும் போது, இவ்விடத்தில் உள்ள பாறைகள் தடுத்ததால், அப்பாறைகளின் மீதே, அக் குன்று, நிலைத்து நின்று, ஓய்வெடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது.' சாத்தியமான வரிகள். உலகில் காணும் படைப்புகளை வெறும் கண்ணால் காண்பதற்கும், அப்படைப்புகளை தங்களில் ஒரு பகுதியாக உணர்வதற்கும் உள்ள வித்தியாசம் இதில் தெரிகிறது. தங்களில் மன வேதனை நிச்சயம் மாறும். தம +1

    பதிலளிநீக்கு
  20. ஆஹா பலமுறை கடந்து சென்ற ஆனைமலையின் வரலாற்றுத் தகவல் அறிந்து கொண்டேன்...அடுத்த முறை பார்க்கவேண்டும்..ஆனால் பாட்டில் விசயம் யோசிக்க வைக்கிறது அண்ணா..
    பகிர்விற்கு நன்றி! த.ம.11

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலை வேண்டாம்
      ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  21. good visit to a Historic point...nice post. with adventure of experiences..with social concious.

    பதிலளிநீக்கு
  22. ஆனைமலை பற்றிய பயணக் கட்டுரை பயனுள்ள கட்டுரை!
    பயணங்கள் முடிவதில்லை!
    தொடருங்கள்!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்
    ஐயா
    ஆனைமலை பற்றிய அரிய தகவலை தங்களின் பதிவு வழி அறிந்தேன்...சில விடயங்கள் வியக்கவைக்கிறது... இன்னும் தேடல்கள் தொடரட்டும். பகிர்வுக்கு நன்றி த.ம13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  24. ஒருநாள் சென்று வர வேண்டும் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  25. அருமையான பயணக் கட்டுரை. அந்த பாடலுக்கான பொருள் தெரியாமல் இருந்தது. தங்கள் பதிவின் மூலம் அதை அறிந்து கொண்டேன்.
    நன்றி!
    த ம 14

    பதிலளிநீக்கு
  26. தங்களின் ஆனைமலைப் பயணத்தின் மூலம் அரியவைகளை அறியவைத்து சமணத்தின் தொன்மையை தொய்வில்லாமல்
    அகமகிழ்ந்து பகிர்ந்து உணர்ந்துகொள்ள வைத்ததற்கு நன்றிகள் பற்பல..

    -குணசாகரன்

    பதிலளிநீக்கு
  27. போன வாரம் தான் ஆனைமலை யோகநரசிம்மரைப் பார்த்துட்டு வந்தோம். மனதுக்குள் சமணர் படுக்கை பக்கம் போய்ப் பார்க்கும் ஆசை தலை தூக்கியது தான். ஆனால் மலை ஏறுவதை மருத்துவர் தடை செய்திருப்பதாலும் வெயில் வேறு ஏறிவிட்டதாலும் இதைக் குறித்து நினைக்காமல் திரும்பி வந்தோம். யோகநரசிம்மரைப் பார்த்தது குறித்துப் பதிவு போட்டிருக்கேன். :)

    பதிலளிநீக்கு
  28. தொலைவில் இருந்து பார்க்கும் போது சிறு குன்று போல் தெரியும் அருகே போனால் போய்கொண்டே இருக்கும் அது போல்தான் மலைகளை ஆராய்ந்தால் பல தொன்மையான தகவல்கள் தோண்ட தோண்ட கிடைக்கும். சமணர்களின் பதிவை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். இன்று பகவான் மஹாவீர் ஜெயந்தி
    ஆனை மலை! ஆனந்த மலை !!

    பதிலளிநீக்கு
  29. ஆனை மலை - இது போன்ற இடங்களை பாதுகாக்காமல் அங்கேயும் கிறுக்கி வைக்கும் நபர்களை என்ன செய்ய.....

    சிறப்பானதோர் இடம் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  30. அன்புள்ள ஜெயக்குமார

    வணக்கம். நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்றிருந்தேன். மதுரை தொடர்பு வகுப்புகளுக்குச் சென்றிருநதபோது வாய்த்தது அனுபவம். அண்ணாமலை அரசருக்கு நன்றிகூறவேண்டும். உங்களோடு மீண்டும் ஆனைமலைக்குள் பயணித்தது வெகு சுகம். அருமையாக விவரித்துள்ளீர்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  31. சில நாட்களுக்கு முன் இன்னொருவர் பதிவில் இந்த ஆனைமலைப் பயணம் பற்றி எழுதி இருந்ததைப் படித்தேன் இப்போது உங்களுடையது ஆனால் கண்ணோட்டங்கள் வேறு வேறு அது பக்திப் பயணம். இது தேடல் பயணம். வாழ்த்துக்கள். நீங்கள் யோக நரசிம்மரைத் தரிசிக்கவில்லையா.?.

    பதிலளிநீக்கு
  32. முன்னோர் வாழிடங்களில் நின்று கொண்டு பின்னோக்கிய பயணத்தில் அவர் இங்கு எப்படி என்ன செய்து கொண்டு இருந்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்ப்பது சுவாரசியம் தான் அய்யா!
    தங்களின் எழுத்தும் விவரிப்பும் அபாரம்.
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  33. அன்பின் ஜெயக்குமார்

    அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு. ஆனை மலைக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறது. திண்டுக்கல் தனபாலன் மற்றும் விமலன் ஆகியோரும் ஆனை மலைக்குச் செல்ல விரு[ப்பம் தெரிவித்துள்ளனர். தனபாலன் இவ்விருப்பம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ஆனை மலை மேல் சென்று வர ஏற்[பாடு செய்யலாமே!

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  34. வரலாற்றுத் தகவல்களுடன் பயணக் கட்டுரை!

    பதிலளிநீக்கு
  35. அழகிய, அருமையான, பயனக் கட்டுரை. அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. தகவல்களுடன் படங்களும் பதிவும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா07 ஏப்ரல், 2015

    மிக அருமையான பதிவு.
    மிக்க நன்றி சகோதரா.

    பதிலளிநீக்கு
  38. ஆனை மலையை பற்றிய அழகான அருமையான வரலாற்றுத் தகவல்களுடன் கூடிய பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  39. சிறப்பான பதிவு!

    ஒவ்வொரு முறையும் தஞ்சையிலிருந்து மதுரை செல்லும்போது இந்த யானை மலையைப்பார்த்து ரசிப்பேன். என்னென்ன ரகசியங்கள் இதில் இருக்கின்றனவோ என நினைப்பேன். உங்கள் மூலம் தான் யானை மலை பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள‌ முடிந்தது. நன்றி!

    ஆனால் உங்கள் கட்டுரை சிறியதாக முடிந்து விட்டது போலத்தோன்றுகிறது. சமணர் குகைகளை ப்டம் எடுக்கவில்லயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமணர் படுக்கைகளைப் பார்க்க இயலவில்லை சகோதரியாரே
      அதற்கான வழி தெரியவில்லை. ஆங்காங்கே தோன்றிய புதிய குடியிருப்புகள் அவ்விடத்திற்குச் செல்லும் வழியினையும் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறினார்கள்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  40. Nice Information.
    While reading your travelogue, I feel that I was in that place in person.
    Your usage of words are superb.

    பதிலளிநீக்கு
  41. ஆனைமலைக்கதை அற்புதமான பதிவு,..அழகை கெடுப்பவர்களை நினைக்க வேதனையாக இருக்கிறது ......உடுவை

    பதிலளிநீக்கு
  42. நல்ல ஆய்வுப் பதிவு .... ஆவணப் பதிவு ....அனுபவத் பதிவு .....சீர்திருத்தப் பதிவு .... பாராட்டுக்கள் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அய்யா ...!

    பதிலளிநீக்கு
  43. இன்று மஹாவீர் ஜெயந்தி

    உலகம் போற்றும் ஒப்பற்ற வாழ்வியல் அஹிம்சை வாழ்வியல் ....!

    எண்ணம்,சொல்,செயல் மூன்றாலும் எவருக்கும் துன்பம் தராத உயர்சிந்தனையை உலகுக்குத் தந்த ஒப்பற்ற சமயம் ஜைனம் - சமணம் - அமணம்....!!

    புத்தர் சமணராய் இருந்த பின்தான் ஞானம் பெற்றார் .
    காந்திக்கு அஹிம்சைக்கு கோட்பாட்டைத் தந்ததில் முதலிடம் வகிப்பது சமணமே ...

    காந்திவழியில் மண்டேலாவை இன்ன பிற அஹிம்சைப் போராளிகளைத் தந்தது சமணமே ....

    ஏன்...?! இன்றைய பொதுவுடைமையாளர் முதல் போராளிகள் பலர் கைக்கொள்ளும் போராட்ட உத்திகளைத் தந்தது சமணமே ....

    எனக்கெல்லாம் ஒரே கவலை .... இத்தனை ஆண்டுகள் சமணம் படித்து எத்தனை நெறிகளைப் பின்பற்றுகிறோம் என்பதுதான் ...?!

    அண்மையில் தமிழ்ச் சமணர்களுடன் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கு " அஹிம்சை நடை " போதும் வாய்ப்புக்கு கிடைத்தபோது சமணர்களின் சால்புத்திறன், பண்பாட்டுநெறி கண்டு நெகிழும் , மகிழும் நெஞ்சைப் பெற்றேன் .

    மானுடம் உள்ளவரை சமணம் வாழும் ....
    சமணம் வாழும் வரை மானுடம் வாழும் ....

    ஏற்புநிலை மாறலாம்
    இயல்புநிலை மாறக்கூடாது ....

    மஹாவீரர் பிறந்த நன்னாடு
    மகிழ்வோடு நன்நாளைக் கொண்டாடு

    அனைவருக்கும் மஹாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் ....!

    வாழ்நாள் முழுவதும் வாழும் நன்னெறிகளைத் தந்தவருக்கு ஒருநாளேனும் வாழ்வளிப்போமே ...!

    பதிலளிநீக்கு
  44. இன்று மஹாவீர் ஜெயந்தி

    உலகம் போற்றும் ஒப்பற்ற வாழ்வியல் அஹிம்சை வாழ்வியல் ....!

    எண்ணம்,சொல்,செயல் மூன்றாலும் எவருக்கும் துன்பம் தராத உயர்சிந்தனையை உலகுக்குத் தந்த ஒப்பற்ற சமயம் ஜைனம் - சமணம் - அமணம்....!!

    புத்தர் சமணராய் இருந்த பின்தான் ஞானம் பெற்றார் .
    காந்திக்கு அஹிம்சைக்கு கோட்பாட்டைத் தந்ததில் முதலிடம் வகிப்பது சமணமே ...

    காந்திவழியில் மண்டேலாவை இன்ன பிற அஹிம்சைப் போராளிகளைத் தந்தது சமணமே ....

    ஏன்...?! இன்றைய பொதுவுடைமையாளர் முதல் போராளிகள் பலர் கைக்கொள்ளும் போராட்ட உத்திகளைத் தந்தது சமணமே ....

    எனக்கெல்லாம் ஒரே கவலை .... இத்தனை ஆண்டுகள் சமணம் படித்து எத்தனை நெறிகளைப் பின்பற்றுகிறோம் என்பதுதான் ...?!

    அண்மையில் தமிழ்ச் சமணர்களுடன் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கு " அஹிம்சை நடை " போதும் வாய்ப்புக்கு கிடைத்தபோது சமணர்களின் சால்புத்திறன், பண்பாட்டுநெறி கண்டு நெகிழும் , மகிழும் நெஞ்சைப் பெற்றேன் .

    மானுடம் உள்ளவரை சமணம் வாழும் ....
    சமணம் வாழும் வரை மானுடம் வாழும் ....

    ஏற்புநிலை மாறலாம்
    இயல்புநிலை மாறக்கூடாது ....

    மஹாவீரர் பிறந்த நன்னாடு
    மகிழ்வோடு நன்நாளைக் கொண்டாடு

    அனைவருக்கும் மஹாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் ....!

    வாழ்நாள் முழுவதும் வாழும் நன்னெறிகளைத் தந்தவருக்கு ஒருநாளேனும் வாழ்வளிப்போமே ...!

    பதிலளிநீக்கு
  45. நல்ல ஆய்வுப் பதிவு .... ஆவணப் பதிவு ....அனுபவத் பதிவு .....சீர்திருத்தப் பதிவு .... பாராட்டுக்கள் நண்பர் கரந்தை ஜெயக்குமார் அய்யா ...!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு