18 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில்

    நண்பர்களே, வணக்கம். நலம்தானே.

     நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.

     நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது.

    ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.

     நினைக்கும் போதே, உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்கின்றன அல்லவா?உண்மையும், நேர்மையும்,
உடல் வலுவும், உள்ளத்து உறுதியும் மிக்க
இவர்தான்,
கர்னல் பா.கணேசன்.

      கர்னல் அவர்களைப் பற்றி இருமுறை வலைப் பூவில் எழுதியும் இருக்கிறேன்.

     நண்பர்களே, இவரை ஒரு முறை, ஒரே ஒரு முறை மட்டுமே, சன்னா நல்லூரில் சந்தித்து இருக்கின்றேன்.

     மடை திறந்த வெள்ளமாய், கொட்டும் அருவியாய் இவர் பேசிய பேச்சுக்களைக் கேட்ட பொழுது எனக்குள் ஒரு வியப்பு. வியப்பு மட்டுமல்ல, ஓர் சந்தேகமும் மெல்ல என்னுள் எட்டிப் பார்த்தது.
இவர் இராணுவ வீரரா
அல்லது
தமிழ்ப் பேராசிரியரா?

      ஆம். தேவாரத்தையும், திருவாசகத்தையும் தன் மூச்சு போல், நொடிக்கு ஒரு முறை உச்சரிக்கும் நற்றமிழ் மனத்தினர் இவர்.


தனது அண்டார்டிகா அனுபவங்களை,
வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்
என்னும் பெயரில், அழுகுத் தமிழில
ஓர் அற்புத நூலாக வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஒரு கைதேர்ந்த எழுத்தாளரும் ஆவார். சற்றேறக்குறைய பத்து நூல்களின் ஆசிரியர் இவர்.

     இந்நூலைப் படித்த நாள் முதலாய், என் நெஞ்சில் ஓர் ஏக்கம். இந்நூலினைப் பற்றி எழுத வேண்டும், எழுதியே ஆக வேண்டும் என மனதில் ஓர் ஏக்கம்.

     பிறகு ஓர் எண்ணம் மெல்ல, மெல்ல உதித்தது. நூலினைப் பற்றி எழுதுவதை விட, இந் நூலினையே, ஒரு குறுந் தொடராய், எழுதினால் என்ன என்று.

    என் விருப்பத்தை வெளியிட்டபோது, கர்னல் அவர்கள், சற்றும் தாமதியாது, அந்நொடியே தன் இசைவினையும் மகிழ்வோடு வழங்கினார்.

     கர்னல் அவர்களின் நூலின் பக்கங்களில் நுழைந்து, அவருடனேயே, அண்டார்டிகா நோக்கி, மீண்டும் ஓர் பயணத்தை, பயணித்துப் பார்ப்போமா நண்பர்களே.

வாருங்கள், நண்பர்களே வாருங்கள்
உறை பனியில் 480 நாட்கள்
இவர் வாழ்ந்த வாழ்க்கையை,
ஒரு சில நிமிடமேனும்
நாமும்
வாழ்ந்து பார்ப்போம்
உறை பனியில் உறைந்தவர்

ஆண்டு 1912. சனவரி 17. பிற்பகல் 3.00 மணி. உலகின் தென் துருவம். அண்டார்டிகா. எங்கு பார்த்தாலும் பனி, பனி, பனி. மிகப் பெரும் பனிப் பாலைவனம்.

    ராபர்ட் பால்கன் ஸ்காட். ஒரு ஆங்கிலேய கடற்படை அதிகாரி. தென் துருவத்தில் காலடி பதிக்கும் முதல் மனிதன் என்ற பெருமையினைப் பெற்றிட வேண்டும் என்பதற்காக, மேற்கொண்ட அயரா முயற்சியின் பயனாய், இதோ, தென் துருவத்தில் நிற்கிறார்.

    
ரால்ட் ஆமுண்ட்சன்
ஆனாலும் அவருக்கு முன்பே, நார்வே நாட்டின் தேசியக் கொடி அங்கு பறந்து கொண்டிருக்கிறது. ரால்ட் ஆமுண்டசன் என்பவர் ஏற்றிய கொடி, பனிக் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது.

ராபர்ட் பால்கன் ஸ்காட் தன் குழுவினருடன்
முதல் மனிதராக இல்லாவிட்டால் என்ன? என் பயணம் வெற்றி. தன் நாட்டுக் கொடியை ஏற்றுகிறார். உடன் வந்த நால்வருடன் இணைந்து, ஐவருமாய் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

    அப்பொழுது மெதுவாக, மிக மெதுவாகத்தான் காற்று வீசத் தொடங்கியது. பனிக் காற்று. நேரம் செல்லச் செல்ல, பனிக்காற்றின் வேகமும் கூடியது. பனிக் காற்று பனிப் புயலாய் உருவெடுத்து, பெரும் வேகத்தோடு, தென் துருவத்தையே புரட்டிப் போட்டது.

    ஐவரும் பனிப் புயலில் மெல்ல மெல்ல முன்னேறி நடக்கத் தொடங்கினர். இன்னும் 67 கி.மீ தொலைவு பயணித்தாக வேண்டும்.

    பனிப் புயலில் தொடர்ந்து நடக்க இயலாத நிலை. கொண்டு வந்த உணவுப் பொருளோ, வேகமாய் தீர்ந்து கொண்டே இருக்கிறது. பனிப் புயலோ இவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது.

   ஐவரில் ஒருவரான ஓட்ஸ் என்பார், தென் துருவத்தில் இருந்து புறப்பட்ட 21வது நாளில், பிப்ரவரி 18 இல் இறந்தே போனார்.

    பனியிலேயே அவரைப் புதைத்து விட்டு நடந்தனர். பனிப் புயலோ விட்டபாடில்லை. பல மாதங்கள் ஆனாலும் விடாமல் தொடரும் புயலாய் இப்புயல் மாறிப்போனது.

     ஈவன்ஸ் என்பார் ஓர் நாள் திடீரென்று மற்றவர்களை விட்டு விட்டு, பனிப் புயலினுள் தனித்து ஓடத் தொடங்கினார். தனது உடல் நிலை மோசமாகவே, மற்றவர்களுக்கு சுமையாய் மாறிவிடக் கூடாது, என்னும் எண்ணத்தில், பனிப் புயலினுள் ஓடிப் போய் தற்கொலையே செய்து கொண்டார்.

     மீதமிருப்பதோ மூவர். பனிப் புயலோ ஓய்ந்த பாடில்லை. உணவோ வேகமாய் குறைந்து, குறைந்து, கடைசியில் தீர்ந்தும் போய்விட்டது.

     இன்னும் 11 கி.மீ தொலைவு நடந்தால் போதும், உணவும், தங்குமிடமும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது. ஆனாலும் நடக்க இயலவில்லை.

     பசியின் கொடுமையால், கை கால்களைக் கூட அசைக்க இயலாத நிலை. மெல்ல மெல்ல இவர்களது உடல், தன் செயற்பாடுகளை, ஒவ்வொன்றாக நிறுத்தத் தொடங்கியது.

    தன் உடலில் மீதமுள்ள வலு அனைத்தையும் திரட்டி, ஸ்காட் தனது நாட் குறிப்பை பையில் இருந்து வெளியே எடுத்தார். எழுது கோலைத் திறந்து, நடுங்கும் கரங்களால், மெதுவாக மிக மெதுவாக எழுதத் தொடங்கினார்.


We shall stick it out to the end. but we are getting weaker.
Of course, and the end cannot be far.
It seems a pity, but I do not think I can write more.
Last entry
For God’s sake Look after our people.

என்னால் எதுவும் எழுத முடியவில்லை.
நாங்கள் பட்டினியால் இறக்கிறோம் என்பது எவ்வளவு வேதனை.
எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள்.

   ஸ்காட் தனது நாட்குறிப்பில் எழுதிய நாள் மார்ச் 29, 1912. அன்றே மீதமிருந்த மூவரும் இறந்து போனார்கள்.
                                 ---

      ஆண்டு 1987. மே மாதம் 7 ஆம் நாள். ஜம்மு காஷ்மீர் இராணுவ முகாம். கர்னல் கணேசன் அவர்கள், அன்று வந்த அலுவலகக் கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    ஒரு சாதாரணத் தோற்றத்தில் ஓர் கடிதம். இராணுவத் தலைமையகத்தில் இருந்து வந்த கடிதம். பிரித்தார், படித்தார். படித்த அடுத்த நொடி பிரமித்தார்.

    ஒரே ஒரு பக்கக் கடிதம். ஆனால் எவ்வளவு பெரிய செய்தி. இக்கடிதம் தன் வாழ்வினையே புரட்டிப் போடும் செய்தியினை அல்லவா, சுமந்து வந்திருக்கிறது.

இந்தியத் தென் துருவ பயணக் குழுவின் துணைத் தலைவராகவும், தென் துருவ ஆராய்ச்சித் தளமாகிய, தக்ஷின் கங்கோத்ரியின் தலைவராகவும் கர்னல் கணேசன் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

தொடரும்.