09 செப்டம்பர் 2015

புதுகை அழைக்கின்றது
தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி

சமுத்திரம் போல் அமைந்த மைதானம்
அங்கே கூடினர் அத்தனை பேரும்.

வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்
உரக்கக் கேட்டான், உயிரோ நம்தமிழ்?
அகிலம் கிழிய ஆம் ஆம் என்றனர்.

உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரை சேர்த்தமைத் தார்கள்,

உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தை யெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்கவி தொடங்கினர், பறந்தது தொழும்பு

கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்
வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள்
தொழில்நூல், அழகாய் தொகுத்தனர் விரைவில்
காற்றி லெலாம் கலந்தது கீதம்
சங்கீ தமெலாம் தகத்தகா யத்தமிழ்
                            பாவேந்தர் பாரதிதாசன்.


வலைப் பூ.

    இந்த நான்கு எழுத்து வார்த்தையின் வல்லமையினையும், இவ்வார்த்தையில் ததும்பிக் கொண்டிருக்கும், உடன் பிறவா உறவுகளின் எல்லையற்ற அன்பினையும் எண்ணிப் பார்க்கின்றேன்.

     ஒரு கணித ஆசிரியராய், சூத்திரங்களும், கரும் பலகையுமே வாழ்வென்று எண்ணி, வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தவன் நான்.

       ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு கணினி வாங்கி, இரண்டாண்டுகள் அதனை ஒரு அலங்காரப் பொருளாகவே பத்திரமாய் பாதுகாத்து வந்தேன்.

     பின் மெல்ல, ஒரு வலைப் பூவினைத் தொடங்கி, இணையக் காட்டுக்குள் நுழைந்து, திக்கு திசை தெரியாமல், ஓர் ஆண்டினைச் செலவிட்டிருக்கிறேன்.


     பிறகு மெல்ல, மெல்ல ஓர் ஒற்றையடிப் பாதையினைக் கண்டுபிடித்துத் தவழத் தொடங்கியபோது, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், பேராசிரியர், எழுத்தாளர் கவிஞர் முனைவர் ஹரணி அவர்களும், என் இரு தோள்களையும் பற்றித் தூக்கி நிறுத்தி, நடை பயிலக் கற்றுக் கொடுத்து, ராஜ பாட்டைக்குச் செல்லும் வழியினையும் சுட்டிக் காட்டினார்கள்.
 

நட, நட என்றும் நடந்தது போதும் ஓடு, ஓடு என்றும் உற்சாகப் படுத்தி, என்னை இணையச் சாலையில், இணையச் செய்த பெருமை, இவ்விருவர்களையேச் சாரும்.

      அதன் பின்னரும் இவ்விருவரைத் தவிர, வலைப் பதிவர் என்று யாரையும் நேரில் சந்திக்காமலேயேதான் என் காலம் கழிந்தது.

      சென்னை வாழ் தமிழன்பர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், மூங்கில் காற்று திரு டி.என்.முரளிதரன் அவர்கள்தான், தானே முன்வந்து, எனது வலைப் பூவினைத் தமிழ் மணத்தில் இணைத்து, வலை உறவுகளின் எல்லையை விரிவுபடுத்தினார்.

      முகமறியா நட்பின் ஆழம் கண்டு நெகிழ்ந்துதான் போனேன்.

    வலைப் பூவில் தொழில் நுட்பம் சார்ந்த சிக்கல்களை, எதிர்கொண்ட போதெல்லாம், திண்டுக்கல்லில் இருந்து, ஓர் கரம் உடனே நீண்டு வந்து, என்னை மீட்டது.

    வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்.

   

இவ்விருவருக்கும், எப்படி நன்றி சொல்வது என்று, இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

    என் மனதில் ஓர் ஆசை. இவ்விருவரையும் ஒரு முறையேனும் நேரில் சந்த்தித்தாக வேண்டும் என்ற ஆசை..

     வலையுலக பிதாமகர்கள் இவ்விருவரையும் நேரில் சந்திக்க, ஓர் பொன்னான வாய்ப்பும் கிட்டியது.

      வாய்ப்பினை வழங்கியவர் யார் தெரியுமா?


புதுகை மாமனிதர்
உலகு போற்றும் பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர்
கவிஞர் முத்து நிலவன்.

    கணினிப் பயிற்சிப் பட்டறைக்கு வாருங்கள் என்றார். சென்றேன்.

    முதன் முதலாய் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களைச் சந்தித்தேன். தொலைக் காட்சிப் பெட்டிகளில் மட்டுமே பார்த்த, சிரித்த முகத்தை, மலர்ந்த முகத்தை, நேரில் கண்டேன்.

மூங்கில் காற்று திரு டி.என்.முரளிதரன் ஐயா அவர்க்ளையும்
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களையும்
சந்தித்தேன்.

இவர்களை மட்டுமா,
புதுக்கோட்டை வலை உலகையே,
அன்றுதான் கண்டேன், பிரமித்தேன்.
    

நண்பர்கள் திரு கஸ்தூரி ரங்கன், திரு மகா.சுந்தர். திரு குருநாத சுந்தரம், பாவலர் ஐயா அவர்கள், சகோதரிகள் திருமதி கீதா, திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன், திருமதி மாலதி, திருமதி சுமதி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் என எண்ணற்ற உறவுகளை, ஒரே நாளில் பெற்றேன்.

யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம்.

     இழந்த உறவுகளைக் கூட எனக்கு மீட்டுக் கொடுத்தது, இந்த வலைப் பூதான்.


தஞ்சையம்பதி

    கணிதமேதை சீனிவாச இராமானுஜன் அவர்களைப் பற்றி, எம்.ஃபில்., ஆய்வு மேற்கொண்ட போது, கணினியில், இணையத்தில், செய்திகளைத் தேடித் தேடி, எனக்கு, வாரிக் கொடுத்தவர் இவர்தான்.

       பல்லாண்டுகளாய் இழந்திருந்த இவர்தம் உறவை, தொடர்பை. நட்பை எனக்குப் புதுப்பித்துக் கொடுத்தது வலைப் பூதான்.

மதுரை வலைப் பதிவர் திருவிழா, 2014

    எழுத்துக்களின் வழி வாசித்து, நேசித்த, நண்பர்களை, சகோதரிகளை, நேரில் கண்ட அற்புத நாள்.

     மூத்த பதிவர்கள் திரு ஜி.எம்.பாலசுப்பிரமணியன் ஐயா, திரு அன்பின் சீனா, கவிஞர் ரமணி, பேராசிரியர் தருமி, திருச்சி திரு தமிழ் இளங்கோ, ஸ்ரீவில்லிப் புத்தூர் திரு ரத்ணவேல் நடராசன் ஐயா, மீசைக்குள் முகத்தை ஒளித்து வைத்திருக்கும் பாசக்கார, மீசைக்கார நண்பர் கில்லர் ஜி, திரு விமலன், திரு ஜோக்காளி, குடந்தை சரவணன் என நீண்டதொரு உறவுகளைக் கண்ணாரக் கண்டு கைகுலுக்கிய திருநாள்.

இதுபோலே வருமா
இனிமேலே
என்று எண்ணி ஏங்கி இருந்த நேரத்தில், வந்துள்ளது ஓர் பொன்னான அறிவிப்பு.


அதுவும்
வலைப் பூவின் கோட்டையாகத் திகழும்
புதுக் கோட்டையில் இருந்து
வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா, 2015.

     புதுக்கோட்டையே பம்பரமாய்ச் சுழன்று, சுழன்று, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், திட்டமிட்டு, திட்டமிட்டு, விழாவிற்கு மெருகூட்டிக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு குழு

விதவிதமாய் விருது அறிவிப்புகள்

வலைப் பதிவர் கையேடு வெளியிடல்

நூல்கள் வெளியிடல்

வலைப் பதிவர் புத்தகக் கண்காட்சி

திகட்டத் திகட்டத் திட்டங்கள் செயலாக்கம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

வலைப் பதிவர் திருவிழாவிற்கென்று
தனி மின்னஞ்சல்
தினந்தோறும் திட்டங்களை, விழா முன்னேற்பாடுகளை
முரசு கொட்டி அறிவிக்க
தனியே
ஓர் வலைப் பூ.

     போகிற போக்கைப் பார்த்தால், வலைப் பதிவர் சந்திப்பு சிறப்புப் பேருந்து, வலைப் பதிவர் சந்திப்பு சிறப்புத் தொடர் வண்டி, வலைப் பதிவர் சந்திப்பு சிறப்பு வானூர்தி என்று விட்டாலும், விடுவார்கள் போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஆர்வமும், வியப்பும் கூடிக் கொண்டே செல்கிறது.

     எப்பொழுது அப்டோபர் 11 எனும் நன்நாள், திருநாள் வரும் என்று மனது அலை பாய்கின்றது.

     நண்பர்களே, எனக்குள் ஓர் ஆசை. பேராசை என்று கூடச் சொல்லலாம். இப்படி ஒரு அருமையான நன்நாளில், உலகோர் போற்ற அரங்கேற இருக்கும் திருவிழாவில், நூல் ஒன்றினை வெளியிட்டுவிட வேண்டும் என்னும் பேராசை.


வித்தகர்கள்

தாங்கள் எடுத்துக் கொண்ட துறைகளில் உச்சம் தொட்ட, மாமனிதர்கள் ஐவரின் சாதனைகள் பற்றிய ஒரு சிறுநூல். அச்சகத்தில் சுடச் சுட தயாராகிக் கொண்டிருக்கிறது.

     நண்பர்களே, நாள் தோறும் நமக்குச் சொந்த அலுவல்கள், காலையில் கண் திறந்த நொடி முதல், இரவு அசந்து போய், படுக்கையில் உடல் சாய்க்கும் அந்நொடி வரை, பிரச்சினைகள், கவலைகள், இன்னல்கள் இருக்கத்தான் செய்யும்.

பிரச்சினைகள் இல்லா வாழ்வு, என்றுமே இனிக்காது அல்லவா.

        நமது சொந்த பிரச்சினைகள், இன்னல்கள், சோகங்கள் அனைத்தையும் ஒரு நாள் மறந்து விட்டு, ஒரே ஒரு நாள் துறந்து விட்டு, தூர தூக்கி எறிந்து விட்டு, புதுகையில் சங்கமிப்போமா நண்பர்களே.

       பேருந்திற்கோ, தொடர் வண்டிக்கோ, வானூர்திக்கோ முன் பதிவு செய்ய வேண்டியிருந்தால், இன்றே புறப்படுங்கள். முன் பதிவு செய்திடுங்கள்.

       வாய்ப்பிருப்பின் குடும்பத்தாரையும் அழைத்து வாருஙகள். வசதியிருப்பின் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

     
இணையம் வழி இணையும் தமிழர்கள்
இதயம் வழி இணைவதோடு
இனிய தமிழ் வழியும் இணைய
என் வாழ்த்துக்கள்

தூரங்கள் என்பன,
சமீபங்களின் விரிவுகளே தவிர,
பிரிவுகள் அல்ல!
பிரிவுகள் என்பன,
உறவுகளின் விரிவுகளே தவிர
முடிவுகள் அல்ல!
என்று வாழ்த்துவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.


இவ்வாண்டு நமக்கு
தீபாவளியும், தைப் பொங்கலும்
இணைந்து,
ஒரே நாளில் வருகின்றன.
அதுவும் புதுக்கோட்டையில்.
அக்டோபர் 11 இல்.


வாருங்கள் நண்பர்களே, வாருங்கள்
புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.