14 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 3


 அத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்

     ஆங்கிலேய கவர்னர் லாட்டீ காட், தனது அரண்மனையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டேயிருக்கிறான். முகமெங்கும் வெறுப்பு மண்டிக் கிடக்கிறது. சில நாட்களுக்கு முன், தனக்கு நேர்ந்த அவமானத்தை, அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

     ஒரு சிறு பெண், தன்னை என்ன பாடு படுத்திவிட்டாள்? சும்மா விடக்கூடாது அவளை? மனதில் கறுவுதலோடு அங்கும் இங்கும் நடக்கிறான்,நடக்கிறான், நடந்து கொண்டே இருக்கிறான். அன்று நடைபெற்ற நிகழ்வு மீண்டும், மீண்டும் அவன் மனத் திரையில், ஓடிக் கொண்டே இருக்கிறது.


---
சிவகங்கை அரண்மனை
சிவகங்கை அரண்மனையின் ஆலோசனை கூடத்தில், கால் மேல் கால் போட்டு, கம்பீரமாய், கர்வமும், ஆணவமும் நிரம்பி வழியும், முகத்துடன் அமர்ந்திருக்கின்றான் கவர்னர் லாட்டீ காட்.

     சிறிது நேரத்தில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் உள்ளே நுழைகிறார்.

      நாற்காலியில் மேலும் பின்னோக்கி சாய்ந்து, இடது காலின் மேல், இருக்கும் வலது காலினை ஆட்டியபடியே, அதிகாரத் தோரணையில் பேசுகிறான் கவர்னர் லாட் டீ.

மிஸ்டர் முத்து வடுகநாதர், நீர் எமக்குக் கொடுக்க வேண்டிய வரியை, வெகு காலமாக கட்டவில்லை. ஏன்? விளக்கம் தேவை?

மன்னருக்கு ஆங்கிலம் தெரியாது,
கவர்னருக்கோ தமிழ் தெரியாது.
கவர்னருடன் வந்த மொழிபெயர்ப்பாளனோ, கைகட்டி, வாய் பொத்தி ஓரமாய், அமைதியாய் நிற்கிறான்.

     மன்னரின் குழப்பத்தைக் கண்டும், தனது பேச்சினை புரிந்து கொள்ள முடியாத, இயலாமையைக் கண்டும், கவர்னரின் கண்களில் ஒரு எகத்தாளச் சிரிப்பு. ஆங்கிலம் தெரியாதா உனக்கு? என்னும் ஒரு கேலிப் பார்வை.


அறையின் வெளியில் இருந்து, இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வேலு நாச்சியார், அறைக்குள் புயலென புகுந்தார்.

எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான், எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

     ஒரு நிமிடம்தான், ஒரே நிமிடம், வாரி சுருட்டிக் கொண்டு, தன்னையும் அறியாமல் எழுந்து நிற்கிறான் லாட் டீ.

யார் இவள்? என் மொழியில், ஆங்கிலத்தில், வீர முழக்கமிடுகிறாரே யார் இவள்? புரியவில்லை அவனுக்கு.

உனக்கு ஆங்கிலம் மட்டும்தானே தெரியும்? இதோ, இப்பொழுது நான் பேசியதை, தெலுங்கில் சொல்கிறேன் கேள்.

கவர்னர் விழித்தான்.

இதோ, மலையாளத்தில் சொல்கிறேன் கேள்.

கவர்னரின் விழிகள் வியப்பால் விரிந்தன.

இதோ கன்னடத்தில் கூறுகிறேன் கேள்.

லாட் டீ தவிக்கத் தொடங்கினான்.

இதோ உருதுவில் கூறுகிறேன் கேள்.

அறையை விட்டு வெளியே ஓடிவிடலாமா? என்ற எண்ணம் லாட் டீயின் மனதில் நுழைந்தது.

ஒரு பெண்மணிக்குள், இத்தனை மொழிகள் அடைக்கலமா?

கம்பீரமாக அமர்ந்திருந்த கவர்னர், இப்பொழுது கைகட்டி நிற்கின்றான்.

இது எங்கள் மண். எங்கள் நாடு. எங்கள் மக்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு துரும்பும், ஒவ்வொரு அணுவும், எங்களின் உழைப்பைச் சொல்லும.

எங்கள் மக்களின் உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும் உருவானது எங்கள் நாடு.

இங்கே ஓடுகின்ற நதிகளும், நிற்கின்ற மரங்களும், வீசுகின்ற காற்றும், அடிக்கின்ற வெயிலும், பெய்கின்ற மழையும் எங்கள் மண்ணின் பெருமையைச் சொல்லும்.

அன்புக்கு எங்கள் தலை என்றும் குனியும், ஆணவத்தோடு நெருங்கினால், தலை மண்ணில் உருளும்.

எங்கிருந்தோ பிழைக்க வந்த நீ, எங்களிடமே வரி கேட்கின்றாயா? வரி கொடுத்து எமக்குப் பழக்கமில்லை.

உதவி என்று கேள், வாரி வாரி வழங்குகின்றேன். இனியொரு முறை, வரி என்று கேட்டால், வரி கேட்டு வருபவனுக்கு வாயே இருக்காது.

    வேலு நாச்சியார் ஆங்கிலத்தல் முழங்கி முடித்த பின்பும், வெகுநேரம், கவர்னரின் காதுகளில், வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.

     இனியும் இங்கே நின்றால், உயிரும் மிஞ்சாது என்பதை அறிந்த கவர்னர், வேகமாய் அரண்மனையை விட்டு வெளியேறினான்.

---

     அன்று சிவகங்கை அரண்மனையை விட்டு, வேகமாய் ஓடி வெளியே வந்தவன், இன்று, இதோ, இங்கே, அடிபட்ட வேங்கையாய், குள்ள நரித் தனத்துடன் குறுக்கும், நெடுக்குமாய் உலாவிக் கொண்டே இருக்கிறான்.

     செய்தியொன்றும் வரவில்லையே? என தவித்தபடி நடந்து கொண்டே இருக்கிறான்.

பணியாள் ஒருவன் அறைக்குள் நுழைய,

என்ன?

மன்னர் முத்து வடுகநாதரும், கவுரி நாச்சியாரும் சுட்டுக் கொள்ளப் பட்டு விட்டார்கள்.

சபாஷ். என்னை எதிர்த்துப் பேசினாரே, நாச்சியார், அந்த வேலு நாச்சியார் அவர் என்னவானார்?

வேலு நாச்சியார் கோயிலுக்கு வரவில்லையாம்.

என்ன, வேலு நாச்சியார் கோயிலுக்கு வரவில்லையா? விடாதீர்கள்? வேலு நாச்சியார் எங்கிருக்கிறார் என்று வலை வீசித் தேடுங்கள். வெட்டி வீசுங்கள், சுட்டுப் பொசுக்குங்கள். அவரும் கொல்லப்பட்டார் என்ற செய்தி வர வேண்டும் எனக்கு.

புறப்படு, என் உத்தரவைச் சொல். வேலு நாச்சியாரின் உயிர் வேண்டும் எனக்கு.

                                                                                                            தொடரும்.