20 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 4


 அத்தியாயம் 4 உடையாள்


வேலு நாச்சியாரைக் கண்டதும், காளையார் கோயில் மக்கள் கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மனித உடல்கள். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.

      குதிரையில் இருந்து இறங்கிய வேலு நாச்சியார், முத்து வடுகநாதரும், கவுரி நாச்சியாரும் இரத்தத்தில் குளித்து, உயிரற்று கிடப்பதைப் பார்த்தார்.

      வேலு நாச்சியாரின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. வஞ்சகமாக மறைந்திருந்து கொன்ற ஆங்கிலேயர்களைப் பழிவாங்க வேண்டும், இப்பொழுதே, வாளேந்திப் போரிட்டு அழித்திட வேண்டும் என உள்ளம் துடியாய்த் துடித்தது. ஆனாலும் இறுதிச் சடங்கினைச் செய்ய வேண்டுமல்லவா?


       மன்னரையும், இளையராணியையும் அடக்கம் செய்வதற்கு, உரிய இடம் தேர்ந்தெடுக்கப் பட்டது. மன்னரும், இருவரும் ஒன்றாகக் கிடத்தப்பட்டு, சந்தனக் கட்டைகளால் மூடப் பட்டனர். நெய் ஊற்றி சந்தனக் கட்டைகள் நனைக்கப் பட்டன. வேலு நாச்சியார் தீ மூட்டினார்.

     கொழுந்து விட்டு எரியும், சந்தனக் கட்டைகளையே, வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்த, வேலு நாச்சியாரின் அருகில் வந்தார், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை.
     
கௌரி நாச்சியார் அடக்கம் செய்யப் பெற்ற இடம்

மன்னர் முத்து வடுகநாதர் அடக்கம் செய்யப்பெற்ற இடம் அருகிலேயே கௌரி நாச்சியார்
அடக்கம் செய்யப்பெற்ற இடம
தாயே, சிவகங்கைச் சீமை வெள்ளையர் வசமாகிவிட்டது. நமக்கு விருப்பாட்சிதான் பாதுகாப்பான இடம். அங்கு செல்லுங்கள். வெள்ளையர்கள், தங்களைத் தேடிக் கண்டுபிடித்து, தீர்த்துக் கட்ட பல் குழுக்களை, பல்வேறு இடங்களுக்கும் அனுப்பியுள்ளனர். உடனே புறப்படுங்கள்.

      வேலு நாச்சியார் குதிரையில் ஏறி தனித்துப் புறப்பட்டார். அரியாக்குறிச்சி அய்யனார் கோயிலைக் கடக்கும்போதுதான் கோயில் தூணில் சாய்ந்தபடி, அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த, அந்த உருவத்தை வேலு நாச்சியார் கவனித்தார்.

      உடையாள் அல்லவா? இங்கே ஏன் அமர்ந்திருக்கிறார்? என எண்ணியபடியே குதிரையை நிறுத்தினார்.

     குதிரையின் குளம்படி ஓசை கேட்டு, சுய நினைவிற்கு வந்த உடையாள், வேலு நாச்சியாரைக் கண்டதும் பதறி எழுந்தார்.

தாயே, தங்களுக்கா இந்த நிலை எனக் கதறியவர்,

தாயே, அந்தப் பக்கம் போகாதீர்கள். அங்கே வெள்ளையர்கள் பலர், தங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பக்கம் செல்லுங்கள் என்றார்.
---
உடையாள்

     சில மாதங்களுக்கு முன், இதே அரியாக்குறிச்சி அய்யனார் கோயிலில்தான், முதன் முறையாக, உடையாளை, வேலு நாச்சியார் பார்த்தார். பார்த்தார் என்பது கூட சரியில்ல, கேட்டார். ஆம் உடையாளின் அழு குரலைக் கேட்டார்.

     அழு குரல் வந்த திசையைப் பார்த்தபோதுதான், உடையாள், அய்யனார் கோயில் தூணில் கட்டப்பட்டுக் கிடந்த காட்சியைக் கண்டார். விரைந்து அருகில் சென்று கட்டுக்களை அவிழ்த்தார்.

     தாயே, என் பெயர் உடையாள். நான் இங்கே மாடுகளை மேய்ப்பது வழக்கம். இன்றும் அவ்வாறு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, சில திருடர்கள், என்னைக் கட்டிப் போட்டுவிட்டு, எனது மாடுகளைக் களவாடிச் சென்று விட்டனர். எனது திருமணச் செலவிற்காக, வளர்க்கப் பட்ட மாடுகள் அவை என்று கூறி அழுதார்.

     வேலு நாச்சியார், உடையாளின் கண்ணீரைத் துடைத்தார். தன் கழுத்தில்  கிடந்த, தங்கச் சங்கிலியைக் கழற்றி, உடையாளின் கழுத்தில் அணிவித்தார்.

     உன் திருமணத்திற்கு, என் சீதனம் இது. கலங்காமல் வீட்டிற்குச் செல். உன் மாடுகள், நாளை உன் வீடு தேடி வரும்.

---

     தனது திருமணத்திற்கு உதவிய , வேலு நாச்சியார், தனது கணவரை இழந்து விட்டாரே என்ற கவலையில் கரைந்து கொண்டிருந்த உடையாள், வேலு நாச்சியார் செல்ல வேண்டிய திசையைக் காட்டி, வழி அனுப்பிவிட்டு, அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நிற்கின்றார்.

      வேலு நாச்சியாரின் குதிரை, பறந்து சென்று மறைந்த, சில நிமிடங்களில், ஏழெட்டுக் குதிரைகள் அவ்விடம் வந்தன. ஒரு வெள்ளைக் காரனும், சில அடியாட்களும்.

இந்தப் பக்கம் வேலு நாச்சியாரைப் பார்த்தாயா?

பார்த்தேன்.

என்ன, பார்த்தாயா? அவர் எந்த பக்கம் சென்றார் சொல். சீக்கிரம் சொல்.

முடியாது.

அடுத்த நொடி, உடையாளின் கன்னத்தில், இடியென ஓர் அடி விழுந்தது. மறு நொடி கன்னம் வீங்கத் தொடங்கியது.

ஒழுங்காகச் சொல்லிவிடு, மறுத்தால், உன் உடலில் உயிர் இருக்காது.

சொல்ல முடியாது

இருவர் குதிரையில் இருந்து கீழே குதித்தனர். ஒருவன் உடையாளின் முடியைப் பிடித்து தர தர வென இழுத்துக் கீழே தள்ளினான். மற்றொருவன், ஓங்கி உடையாளின் வயிற்றில் மிதித்தான்.

சொல்ல முடியாது

மீண்டும் பலங் கொண்ட மட்டும், வயிற்றில் உதைத்தான். உடையாள் தரையில் விழுந்த மீனாகத் துடித்தாள்.

சொல்ல முடியாது

ஒருவன் வாளை உருவினான், ஓங்கினான். அவனைப் பார்த்து, அந்த வேதனையிலும், உடையாள் சிரித்தாள்.

சொல்ல முடியாது

வேகமாய் வாள் கீழே இறங்கியது. ஒரே நொடிதான், உடையாளின் தலை, உடலை விட்டுத் தனியே, தரையில் உருண்டோடியது.

     தனித்துக் கிடந்த உடையாளின் முகத்தில் ஓர்  அமைதி, ஓர் ஆனந்தம், ஓர் நிறைவு.


                                                              ... தொடரும்